Sunday 29 August 2021

தமிழ்நாடும் தமிழ் அகதிகளும்


ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு 317 கோடியில் சிறப்புத் திட்டங்கள், படிப்பதற்கு உதவிகள், அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் என நடவடிக்கைகள் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் மூன்று தலைமுறைக்கு  மேலாக வாழும் அகதிகள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களில் ஒரு பகுதியாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். 

அவர்களின் பிள்ளைகள் படித்து பட்டங்கள் பெற்றாலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருகின்றன. படித்து வேலைகிடைக்காத பல ஆயிரக்கணக்கானவர்கள் பெயின்ட் அடித்தல், கடைகளில் வேலை என்று அன்றாட கூலி வேலைக்கு செல்லத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிற முதலாளிகளிடமிருந்து எந்த பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. திமுக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அகதிகள் மீது ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் அவர்களின் அரசியல் நலன்களுக்கான ஒரு பொருளாக இந்த அகதிகளை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். 

மூன்று தசாப்தங்களுக்கு மேல் நாடற்றவர்களாக வாழும் இவர்கள் போர்களத்தில் உயிரைக் காப்பாற்ற ஆபத்தான படகு பயணத்தின்மூலம் வந்தவர்களை திருட்டுவழியாக வந்தவர்கள் என்று இந்திய முதலாளித்துவ காங்கிரஸ் மற்றும் இந்துமேலாதிக்கவாத பாஜக தலைமையிலான மத்திய / ஒன்றிய அரசாங்கங்கள் மறுப்பதும், குடியுரிமைக்காக போராடுவதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கூறிக்கொண்டிருப்பது தமிழ் அகதிகளின் மீதான அக்கறையில் இல்லை அது அவர்கள் கொண்டிருக்கிற அரசியல் காரணங்களுக்கானதாகும்.

இந்தியா கொண்டிருக்கிற பூகோள மூலோபாய கொள்கைகளுக்கு மாநில அரசாங்கங்கள் அகதிகள் மீதான அரசியலை நடத்துகின்றன. அகதிகளை சீனா ஆதரவு இலங்கைக்கு எதிராக விடுதலை இயக்கங்களாக உருவாக்குவதும் அல்லது இலங்கை அரசை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான கருவியாக பயன்படுத்தலாம்.  

சந்தேகத்தின்பேரில் தமிழ் அகதிகள் சிறப்புமுகாம் என்ற முகாமுக்குள் ஆயுள் தண்டனை அனுபவித்திக்கொண்டிருக்கும்  அகதிகளை தண்டிப்பதானாலும் சரி அல்லது அகதிகளின் பிரச்சனைகளில் ஈடுபடும் அகதிகளை முகாம் விட்டு முகாம் அல்லது சிறப்புமுகாமுக்குள் தூக்கியடிப்பதானாலும் சரி எந்தவிதமான மனித உரிமை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கம் பேணுவதில்லை. அதற்கு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்டு சிபிஐ மற்றும் சிபிஎம் மற்றும் சாதியவாத, வகுப்புவாத கட்சிகள் அரசுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அல்லது அரசின் கருவிகளாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 இன்று உலகம் முழுக்க வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்ட அகதிகள் 82.4 மில்லியன் ஆக இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவிக்கிறது. அதிலும் 35 மில்லியன் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருக்கின்றனர். அகதிகள் வறுமைநிலையிலான வாழ்க்கை, கொரோனா வைரஸ் தொற்றுக்கள், வேலைவாய்ப்பின்மை என பல்வேறு நெருக்கடிகளை முகம்கொடுக்கின்றனர். அவர்களை கூலித் தொழிலாளர்களாக பயன்படுத்தும் முதலாளிகள் பெரும் லாபத்தையீட்டி வருகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான எந்தவிதமான சமூக பாதுகாப்பும் இல்லை. அகதிகளை உருவாக்குவதும், அவர்களை நாடற்றவர்களாக, குடும்ப உறவினர்களை பிரிந்தவர்களாக்குவதும் முதலாளித்துவ அரசாங்கங்களின் லாப நோக்கு மற்றும் போர்கள் என அவர்கள் கொண்டிருக்கும் தவிர்க்கமுடியாத கொள்கைகளிலிருந்தே வருகின்றன. 

இந்தியாவில் அன்றாடம் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை நெருக்கடிகளையும் அகதிகள் முகங்கொடுக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை இந்திய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சியிலும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச புரட்சி போராட்டத்திலும் தங்கியிருக்கிறது. இந்திய மற்றும் தமிழ்நாடு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அகதிகளுக்கு அல்லது உழைக்கும் மக்களுக்கு பூரணமான ஜனநாயக கோரிக்கைகளை ஆற்றுவதற்கு லாயக்கற்று இருக்கின்றனர். அவர்கள் முதலாளிகளின் லாப நோக்கங்களுக்கான அரசியல் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  

#தமிழ்நாடு #இந்தியா #தமிழ்அகதிகள் #அகதிகள்முகாம் #அகதிமாணவர்கள் #அரசியல் 

படம்; இந்தியாடுடே

No comments:

Post a Comment