Saturday 18 September 2021

சமூக நீதி என்ற பெயரில்

படம்: அம்பேத்கர் மற்றும் பெரியார் (ஈவே ராமசாமி)

பெரியார் 143வது பிறந்த நாள் தினத்தன்று அதை  சமூக நீதி நாளாக தமிழ்நாடு திமுக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. யாருக்கான சமூக நீதி என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலிருக்கும் ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகிற மக்களிடமிருந்து சமூக நீதி பெரிதாக வெறுபட்டிருப்பதாக அடையாளப்படுத்த முடியவில்லை.

ஆட்சி மற்றும் பதவிகளிலிருந்த பிராமணர்களின் அதிகாரமும், பிராமணரல்லாத மேற்தட்டு சாதியினராலும் தொழிலாளவர்க்கம் முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டப்படுகிற சமூக அமைப்பாகத்தான் மாறியிருக்கிறது. ஒடுக்கப்படுகிற, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளைக் கண்டு பிராமணரல்லாத சாதிய உயரடுக்கினர் அரசாங்கங்களுடன் சேர்ந்து நசுக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ அமைப்பு தனது லாபத்திற்காக பழைய தொழில்முறைகளை அழித்து நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிலாளர்களை அணிதிரட்டும் இடத்தில்தான் சாதி, இன, மதங்களை கடந்து தொழிலாளர்களாக ஒன்று சேர்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகளை முதலாளிகள் திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறார்கள்.

சமூக நீதி பேசப்படுவதற்கு பின்னால் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளில் இருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் சாதிய வெறியர்களாகவும், சாதியத் தலைவர்களாகவும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.  இவர்கள் பெருநிறுவன முதலாளிகளின் நலன்களுக்கான அரசமைப்பில் தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனர்.  

விடுதலை சிறுத்தைகள் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான கட்சியின் தலைவர்கள் என்று கூறுபவர்கள், பிராமணர்களை எதிர்த்தும் அதற்காக கடவுள் மறுப்பு பேசுகின்ற முற்போக்கானவர்கள் என்று கூறும்  தமிழ்தேசியவாதிகள், திராவிடர்கள், நாம் தமிழர் கட்சி போன்ற வகுப்புவாதிகள் மற்றும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான வர்க்க போராட்டத்தை மறுத்து புதிய ஜனநாயகப் புரட்சி, முதலாளித்துவ புரட்சி என்று கூறிக்கொண்டு தொழிலாளர்களை திசைதிருப்பிக்கொண்டு முதலாளிகளுக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ராலினிச சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மற்றும் மாவோயிச அமைப்புகள், முற்போக்கு பேசுகின்ற முதலாளித்துவ திமுக மற்றும் அஇஅதிமுக மற்றும் மதவாத பாஜக, முதலாளிகளின் ஆசிர்வாதம் பெற்ற காங்கிரஸ் மற்றும் பிற மாநில பிராந்தியவாத கட்சிகளாலும் சமூக நீதியை கொண்டுவரமுடியாது. தொழிலாளர்களை பிரித்தாளும் திட்டமே அவர்களின் முதல் வேலையாக இருக்கிறது.

பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களின் வரலாறுகளை படித்தால் அவர்கள் பிராமணரல்லாத பிற சாதிய மேற் தட்டுக்களுக்கே சேவகம் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட குறிப்பாக தொழிலாளர்களின் எழுச்சிகளை அடையாளம்கண்டு அதை திசைதிருப்பி முதலாளித்துவ அமைப்பை பாதுகாத்திருக்கிறார்கள்.   முதலாளித்துவ அரசியல் கட்சித் தலைமைகளிடம் கோரிக்கை வைத்துக்கொண்டும், அதை விமர்சித்துக்கொண்டும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்றும் அதே அரசியல் அமைப்பை பாதுகாக்கும் பங்காளிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

சமூக நீதி என்பது சமூக சமத்துவத்தில்தான் தங்கியிருக்கிறது அதை இந்த முதலாளித்துவாதிகளிலாலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் புகழும் நடுத்தர  படித்து முற்போக்கு பேசும் குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களாலும், ஸ்ராலினிஸ்டுகளாலும், போலி இடதுகளாலும் செய்யமுடியாது என்பதை அடித்துக் கூற முடியும்.

சமூக சமத்துவத்திற்கு ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் இணைந்து இந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதில்தான் தங்கியிருக்கிறது.

#சமூகநீதி #பெரியார் #திமுக #அஇஅதிமுக #சாதி #தமிழ்நாடு #தொழிலாளர்கள் #ஏற்றத்தாழ்வு

No comments:

Post a Comment