Sunday 28 November 2021

ஜெய்பீம் திரைப்படமும் தூண்டிவிடப்பட்ட சாதிய அரசியலும்


 ஜெய்பீம்
... நடிகர்களின் சிறந்த நடிப்புகளுக்கு அப்பால்... ஆட்சியாளர்கள் மீதும், காவல்துறையினரின் மீதும் குறிப்பாக ஒடுக்குகின்ற பெரும் பணக்காரர்களுக்கு எதிராக சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே இருக்கின்ற சமூக எழுச்சியின் அலையை மேலும் தூண்டுவதாக அமைந்துவிடும் என்பதால் அதைத் சாதிப் பிரச்சனையாக திசைதிருப்பி ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், ஏழைகள் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களைப் பிரிக்கும் ஒரு தந்திரச் செயலாகத்தான் தமிழ்நாட்டு முதலாளித்துவ தட்டுக்களும், பெரும் பணக்கார சாதிய அரசியல்வாதிகளும், நடிகர்களும் அதனைக் கையில் எடுத்து திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்ற எத்தகைய மோசமான வன்முறை நடவடிக்கைகளையும் செய்யும் என்பதை திரைப்படத்தில் வராத எத்தனையோ சாட்சிகள் எம் கண்முன்னே இருக்கின்றன.

ஜெய்பீம்... திரைப்படத்தில் சில சாதிய அரசியல் குறியீடுகள் திட்டமிட்டோ அல்லது தவிர்க்கமுடியாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்குப் பின்னால் இந்திய ஆளும் தட்டுக்கள் நிம்மதியடைந்திருக்கின்றன. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எழுச்சிகளைத் தள்ளிபோட அது சாதிப் பிரிவினையைப் பயன்படுத்துவதன் மூலம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. சாதி எதிர்ப்புப் போராட்டம் வெறும் குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிரான போராட்டமாக சுருக்கப்பட்டிருப்பதுடன் சாதி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தற்போது இருக்கும் தமிழ்தேசிய மற்றும் திராவிட அமைப்புகள், சாதியக் கட்சிகள் மட்டுமல்லாது மார்க்சிஸத்திலிருந்து விலகிய ஸ்ராலினிச இந்திய கம்யூனிசக் கட்சிகளும் செயலிழந்துவிட்டன.
ஜெய்பீம்... திரைப்படத்தைப் பார்த்து காவல்துறையிலுள்ளவர்கள், அல்லது நீதித்துறையிலுள்ளவர்கள் அல்லது ஆளும் அதிகாரத்தில் இருக்கின்ற வசதிபடைத்தவர்கள் மாறிவிடுவார்கள் என்றால் மாறிவிடுவார்களா? ஒடுக்கப்பட்டவர்களையும், ஏழைகளையும் அடக்குமுறை கொண்டு ஆட்சியை நடத்துவது தனிப்பட்ட நபர்கள் சார்ந்ததாக காட்டுவதும் அவர்கள் மாறினால் சமூகம் மாறிவிடும் என்று மக்களை நம்பவைப்பதும் ஒரு ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகும். ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வன்முறை என்பது இந்த முதலாளித்துவ அமைப்பில் கூடவே பிண்ணிப்பிணைந்து இருக்கிறது.
 
 
ஜெய்பீம்... சாதிய பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சியை செய்ய அழைப்புவிடுக்க லாயக்கற்ற ஸ்ராலினிச இந்திய கம்யூனிசக் கட்சி சிபிஎம் செயலிழந்த நிலையில் அக் கட்சியிலிருந்த ஒரு உறுப்பினர் வழக்கறிஞராகி நீதிபதியாகி முதலாளித்துவ இயந்திரத்திற்குள் தீர்வுகளைத் தேடிச் செல்லத் தள்ளப்பட்டுள்ளார். சமூகத்தின் மீதான அவருடைய அக்கறையை பாராட்டுகிற அதே நேரத்தில் தனி மனித மாற்றங்கள் சமூக மாற்றங்களை எதையும் கொடுத்துவிடவில்லை.
 
அவர் வாயாலேயே இந்த காவல்துறை பிரிட்டிஸ் காலத்தில் உருவாக்ப்பட்ட முறையில்தான் இன்றும் பேணப்படுகிறது என்று கூறியிருப்பது இந்தியா சுதந்திரம் இன்னும் அடையவில்லை என்பதையே காட்டுகிறது. சிபிஎம் கட்சியில் இருப்பவர்களுக்கு கம்யூனிசக் கட்சி என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்த்தின் பெயரில் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி நிச்சயம் வந்திருக்கும்.
இங்கே பிரதான கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒடுக்கப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தை ஒன்று சேர்த்து சாதியால் மதத்தால் இனத்தால் என பல்வேறு பிரிவினைகளை உருவாக்கி குளிர்காய்ந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிய போராடும் தொழிலாள வர்க்கத்தின் ட்ரொட்கிச கட்சியின் வெற்றிடம். 
 
முதலாளிகள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராக போராடக்கூடாது என்பதற்காக அவர்களைப் பிரித்துவைக்க உருவாக்கப்பட்டவைகளில் சாதியும் ஒன்று. முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சாதி யும் தூக்கியெறியப்படும்.
 
தமிழ்நாட்டிற்குள்ளும் அதற்கு அப்பாலும் இதே போன்ற ஒடுக்கப்பட்டவர்களின் காயப்படும் வலிகளின் அலறல் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

No comments:

Post a Comment