Saturday, 11 July 2020

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமை 1,974 பேரும் திங்களன்று 1,843 பேரும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு நேற்று மட்டும் 44 பேர் மரணித்துள்ளனர். கடந்த வாரம் பூராகவும் இந்த எண்ணிக்கை நாளாந்த விளைவாக உள்ளதோடு. இதுவரை தமிழ்நாட்டில் 46,504 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 479 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாடு மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாகும்.

இந்த பாதிப்புக்கும் மரணங்களுக்கும், பெரும் வணிகத்தின் இலாபத்தை தக்கவைப்பதற்காக, வெகுஜனங்களின் உயிரை அலட்சியம் செய்து மீண்டும் வேலைக்குத் திரும்புதல் என்ற குற்றவியல் கொள்கையை அமுல்படுத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க.) அரசாங்கம் பொறுப்பாகும்.

இந்த மிகப்பெரும் அதிகரிப்பை அடுத்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பின்னர், சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் ஜூன் 19 முதல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த பழனிசாமி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. முழு ஊரடங்கை ஜூன் 19 வரை ஒத்தி வைப்பது மேலும் வைரஸ் பரவுவதற்கே வழிவகுக்கும்.

முழு ஊரடங்கின் போது மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை விநியோகிப்பதில் அக்கறைகாட்டாத பழனிசாமியின் அரசாங்கம், இந்த இரண்டு வார காலத்துக்கு ரேசன் அட்டை வைத்துள்ள வறிய குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் என்ற அற்ப உதவித் தொகையை அறிவித்து உழைக்கும் மக்கள் மீதான தனது மோசமான அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் மற்றும் ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களை பின்பற்றி, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும், “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (Herd immunity) என்ற, அறிவியல் விரோதமான மற்றும் மில்லியன் கணக்கானவர்களை காவுகொள்ளும் நிலைப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதை கைவிட்டு, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாகவே, நாடு பூராகவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களதும் மரணித்தவர்களதும் எண்ணிக்கை மோசமாக அதிகரித்து வருகின்றது.

இந்தியா முழுவதும் நாளாந்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா தாக்கி வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாயன்று 343,091 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,900 பேர் மரணித்துள்ளதுடன் 12 வயதுக்கு கீழ்பட்ட 2,270 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையாகும். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் வசிக்கும் மாநிலத் தலைநகர் சென்னையில் கொவிட்-19 பெரும் வீச்சில் பரவி வருகின்றது. திங்கட் கிழமை மாத்திரம் 1,257 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியர்களும் அடங்குவர். மருத்துவ பாதுகாப்பின்மை காரணமாக முதலமைச்சர் அமர்ந்திருக்கும் தலைமைச் செயலகத்திலேயே 138 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மிகவும் ஏழை மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற பகுதிகளின் நிலைமையை ஒருவரால் கணித்துக்கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் இப்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள 79 பரிசோதனை நிலையங்களில் 34 தனியாருடையதாகும். அவற்றில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 முதல் 14,000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ICMR) தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர், “தற்போதைய போக்குகளின் அடிப்படையில் நகரத்திலேயே 10,000 பேரை பரிசோதிக்க வேண்டும், மேலும் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 18,000 பேர் பரிசோதிக்கப்பட வேண்டும்”, என்று கூறியிருக்கிறார். ஆய்வகங்கள் அதிகரித்த அளவுக்கு பரிசோதனைகள் அதிகரிக்கவில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ துறையில் நிலவும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயது தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, கொவிட்-19 பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை அடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதே மருத்துவமனையில் கடந்த வாரம் முதுகலை மாணவர்கள் உட்பட 140 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது.

பூட்டுதலை தளர்த்திய அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம், வைரஸின் சமூகப் பரவலைத் தடுக்க எதையும் செய்யவில்லை. ஜூன் 1 அன்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையிலிருந்து கடலூருக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் பணியில் இருக்கும் நேரத்தில்தான் பரிசோதனை முடிவு வந்துள்ளது. இவ்வாறு, சோதனை முடிவு வரும்வரை நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவதாலும், வைரஸின் பாதிப்பைப்பற்றிய அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

கொரோனா தொற்றுக்களிலிருந்து பேருந்து தொழிலாளர்களையும் பயணிகளையும் காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்குமிடையில் தனிமனித இடைவெளிகளை பராமரிக்க வழியில்லாத போது பயணிகள் மத்தியில் இடைவெளியின்மையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் பொதுமுடக்க தளர்வுகளில் பேருந்து, இரயில், கால் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றின் பயன்பாட்டைத் தொடங்கியிருந்ததுடன், ஏற்கனவே மதுவிற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியில் 50 சதவீதமும் பாதிப்பில்லாத பிற இடங்களில் 100 சதவீதமும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது உழைக்கும் மக்களின் கடினமான வாழ்நிலையை பெருவணிக இலாபச் சுரண்டலுக்கு சாதகமாக்கும் கொடூரமான நடவடிக்கையாகும்.

பரந்தளவிலான வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றுதல், அன்றாட வருமானம் பெறுவோரின் அவலநிலை, உயிர்பலிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கொடுமையான நீண்ட நடை பயணங்கள் என வார்த்தைகளில் சொல்லமுடியாத எண்ணிலடங்கா வேதனைகள் மற்றும் துன்பங்களுக்குள் உழைக்கும் மக்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு இன்றி 50 சதவீதம் பேர் பணியில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்ற அறிவிப்பினால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர், கொரோனா தொற்றும் அபாயத்துக்கு மத்தியில், இக்கட்டான சூழ்நிலையில் வேலைக்குச் செல்கின்றனர்.

சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் இருக்கும் நோக்கியா நிறுவனத்தில் 42 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில் இருக்கும் ஹுண்டாய் தொழிற்சாலையில் மூன்று தொழிலாளர்களுக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கிகொண்டிருக்கிறது.

திருவொற்றியூர் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலையில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை எனவும், 25 சதவீத தொழிலாளர்களுடன் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அளித்த விதியை மீறி 33 சதவீத தொழிலாளர்களை பணியலமர்த்தி நிர்வாகம் செயல்பட்டதாக தொழிலாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அங்கிருக்கும் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினர்கள் ஆலையின் நிர்வாகத்திடம் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு, முறையான பதில் கிடைக்கவில்லை. எனினும் மூன்று வேலைநேர முறையையும் செயற்படுத்துவதில் நிர்வாகிகள் கவனமாக இருந்தார்கள், என்று அந்த தொழிலாளி மேலும் கூறியுள்ளார். ஆயினும் தொழிற்சங்கம் அதற்கு உடந்தையாக செயல்படுகிறது.

உலகின் ஏனைய அரசாங்கங்களைப் போலவே, இந்திய ஆளும் வர்க்கமும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதற்காக சிக்கன நடவடிக்கைகளையும் தனியார்மயப்படுத்தலையும் செயல்படுத்த கொரோனா தொற்றுப் பரவலை பற்றிக்கொண்ண்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதி நெருக்கடியை சுரண்டிக்கொண்டுள்ள மோடியின் அரசாங்கம், தமிழ்நாட்டில் மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்தும் நீண்டகால குறிக்கோளின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தினை நிறுத்தினால், கடன் வாங்குவதற்கான அனுமதியினை வழங்குவதாக கூறியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் ஒரு போராட்ட அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலைத் தளங்களில் முதலாளிகள் மற்றும் மேலாளர்களின் தொழிலாள-விரோத அடாவடிதனங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு நெருக்கப்படுகின்றார்கள். பேருந்துகள் ஓடாத நிலையில் வேலைக்கு வரமுடியாத தொழிலாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்துள்ளனர், பெரும்பாலான ஊழியர்கள் மே மாத சம்பளத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும், தொழிலாளர்களின் விடுமுறை நாட்களைக் கழித்தும், பணிக்கு வந்தால்தான் சம்பளம் என்றும், பணிக்கான நேரத்தை அதிகரித்தும், வேலையைவிட்டு நீக்குதல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன.

ஜூன் 1 முதல் பேருந்துகளை ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரசாங்கம் மே மாத சம்பளத்தினை, 11 மாத வருகைப் பதிவின் சராசரியை கணக்கிட்டு சம்பளத்தை வெட்டியுள்ளது. குறைந்த ஊதியம் வழங்கியிருப்பதை கண்டித்து பேருந்து ஊழியர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். போக்குவரத்து துறையை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக தொழிலாளர்களை பல்வேறுவழிகளில் தண்டிக்கும் ஒரு செயலாக இது இருக்கிறது. குறைந்த சம்பளமே பெறும் இத் தொழிலாளர்கள் அரசினாலும், தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளாலும் எந்த போராட்டத்திலும் முழுமையான வெற்றியை பெறமுடியாமல் இருக்கிறார்கள்.

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு மோசமாக சுரண்டப்படுகின்றனர். மதுரையிலுள்ள கப்பலூர் தொழிற்பேட்டையின் தொழில் முனைவோர்கள், சிறிய அளவிலான தொழில்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழில்களைத் தொடங்க முடியாத நிலை ஏற்படுவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர் திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது, எனக் கோருகின்றனர்.

கப்பலூர் தொழில்துறை சங்கத்தின் தலைவர் பி.என். ரகுநாதராஜா, தொழிற்பேட்டையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மொத்த தொழிலாளர்களில் 20 வீதம் முதல் 40 வீதம் வரை பங்களித்துள்ளதாக தி இந்து பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் தொழில்முனைவோர்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், "எங்கள் வரி மற்றும் மின்சார கட்டணங்களை செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்கு மேலாக, குறைந்த சம்பளத்திற்கு புதிய பணியாளர்களை எவ்வாறு உருவாக்குவது என்று நாம் சிந்திக்க வேண்டும்." என்று மேலும் கூறியுள்ளார்.

தேயிலை, ஏலக்காய் போன்ற பணப்பயிர் தோட்டங்களில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் வேலை செய்வதற்கு ஆளில்லாமல் இருப்பதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், வறுமையிலிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்தான் சம்பளம் என்கிற தோட்ட நிர்வாகங்களின் கட்டாயப்படுத்தலால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்..

பல்வேறு ஊடகத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையிழப்பு, ஊதிய நிறுத்தம் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு முண்டு கொடுத்து வரும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) இன் சிஐடியூ தொழிற்சங்கம், ஊடகத்துறையில் பணிநீக்கம் சம்பளம் பிடித்தல் போன்றவற்றை செய்ய அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருக்கின்றது. பல தசாப்தங்களாக தொழிலார்களை முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் கட்டிவைக்க செயல்பட்டுவரும் சி.பி.எம். இன் தொழிற்சங்கத்தின் நடவடிக்கையை, அண்மைய ஏமாற்று வித்தையாகவே தொழிலாளர்கள் சரியாக காண்கின்றனர்.

கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள நெருக்கடியின் மத்தியில், உலகம் பூராவும் அரசியல் கட்சிகளின் பாத்திரம் மேலும் மேலும் அம்பலத்துக்கு வருவதைப் போலவே, இந்திய ஸ்ராலினிச கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நிதியாளும் தட்டுக்களின் இலாபங்களை பாதுகாக்கவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன என்பதும் என்றுமில்லாத வகையில் தெளிவாக உள்ளது.

கொரோனா தொற்று நோய், மாநில மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உயிர்கொல்லி நோயை உடலில் தாங்கிக்கொண்டு பெருவணிகத்தின் இலாபத்துக்காக உழைக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இத்தகைய கட்சிகள், அவற்றின் கைக்கூலி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக்கொண்டு, தங்களுக்கான சொந்த சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதன் ஊடாக மட்டுமே தமது உயிர்களையும் நலன்களையும் பாதுகாக்க முடியும்.
By V. Jayasakthi
17 June 2020

https://www.wsws.org/ta/articles/2020/06/17/nadu-j17.html

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்ற நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி நெருக்குகின்றது

தமிழ் நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க.) அரசாங்கம், மே 18 இலிருந்து மாநில அரசாங்க ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும், தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் மற்றும் பேருந்துகள் இயங்கலாம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் 700 பேருக்கும் அதிகமானோர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வேலைக்குத் திரும்புவதற்கான இந்த அழைப்பானது மிகப் பாரதூரமான விளைவுகளுடன் தொற்று நோய் மாநிலம் முழுதும் பரவுவதற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தின் ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டதான இத்தகைய அறிவிப்புகள், இந்தியாவிலும் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ வர்க்கமும் அவற்றின் அரசாங்கங்களும், தொழிலாள வர்க்கத்தின் உயிர் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக வெளிப்படுத்திவரும் தொடர்ச்சியான குற்றவியல் அலட்சியத்தின் பாகமாகும்.

உழைக்கும் மக்களின் உயிர்வாழ்வானது, பெரும் வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் வலியுறுத்தலில் இருந்தே எழுகின்றது.

மே 27 அன்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேவேளை 133 பேர் மரணித்துள்ளனர்.

முதலாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1,45,000 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 4,337 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலைமையில், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனிக் கடைகள் என பல்வேறு வணிக நடவடிக்கைகளை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசாங்கம் அனுமதித்திருப்பது, வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லூநர்கள் எச்ரிக்கின்றார்கள்.

மோடியின் அரசாங்கமும் அதன் சார்பு ஊடகங்களும் தங்களது குற்றவியல் பொறுப்பை நியாயப்படுத்த, அமெரிக்காவில் 25 நாட்களுக்குள் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியாவில் 64 நாட்களுக்கு பிறகே ஒரு இலட்சத்தை தாண்டியதாகவும் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றன. இதைப் பின்பற்றிக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து, பின்னர்தான் குறையும் என கண்டறியப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டார்.

கோவிட்-19 வைரஸ் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் பரவியுள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,645 ஆக உள்ளது. அதே வேளை 5,906 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 80 சதவீதமானோர் சென்னையை சேர்ந்தவர்களாவர்.

உண்மையில், மருத்துவ பரிசோதனைகள் தாமதமாகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருந்தொகையில் அதிகரிக்கின்றமை, தொற்றுக்குள்ளான பிரமாண்டமான எண்ணிக்கையானவர்கள் சமூகத்தில் வைரஸை பரப்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான பாரதூரமான அறிகுறியாகும். இதுவரை சென்னையில் 10 இலட்சம் பேருக்கு 14,000 பேரே பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையில் பழனிசாமி சனிக்கிழமை சேலத்தில் வைத்து ஊடகங்களுக்கு உரையாற்றிய போது, சென்னையில் சமூகப் பரவல் இல்லை என கூறிக்கொண்டார். சென்னையில் சிறிய வீடுகளில் ஆறு ஏழு பேர் ஒரே வீட்டில் நெருக்கமாக வாழுகின்ற பகுதிகளில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறிய அவர், “அவர்கள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த பரவல் ஏற்பட்டிருக்காது” என வஞ்சத்தனமாக குற்றம்சாட்டினார்.

இலட்சக்கணக்கான மக்கள் சேரிப்புறங்களில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற இத்தகயை இழிநிலையிலான குடிசைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளமைக்கு தசாப்த காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பொறுப்பாளியாகும்.

தமிழ்நாடு அரசாங்கம், மீண்டும் மீண்டும், போதுமான அளவு தனிப்பட்ட மருத்துவ பாதுகாப்பு கருவிகள் (PPE), மற்றும் என்95 முகக்கவசங்களை வைத்திருப்பதாகக் கூறி வருகின்ற போதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், அரசாங்கத்தின் கூற்றுக்களை நிராகரித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதுகலை மருத்துவர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அதே பிபிஇ யை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததை வெளிப்படுத்தியிருப்பதாக www.newsclick.in ஊடக வலைத்தளம் குறிப்பிட்டிருக்கிறது.

கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் என பலர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 வார்டுகளுக்கு செல்லும் மருத்துவர்கள் மட்டுமே பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்துவதாகவும், அதே கட்டிடத்தில் இருக்கும் மற்ற நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதில்லை எனவும் newsclick.in ஊடகத்திற்கு கூறியிருக்கிறார்கள்.

அரசாங்கம் கடந்த அக்டோபரில் சிறந்த சம்பளம், பணிநிரந்தரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண் மருத்துவர்கள் உட்பட 120 மருத்துவர்களை சென்னையை விட்டு வெகுதூரத்திற்கு பணிமாற்றம் செய்தது. இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களின் தேவையிருக்கும் பட்சத்திலாவது அரசாங்கம் அவர்களை மீண்டும் இங்கே சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் அரசு மருத்துவர்களை புகழ்வதுபோல் பேசினாலும் பின்னால் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்காக அவர்களை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தற்போதுவரை 68 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் 28 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களும் அடங்கும். பரிசோதனை கட்டணமான 4,500 ரூபாவை தனியார் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அரசாங்கம் செலுத்துவதாக கூறினாலும் அங்கு வரும் நோயாளிகளிடம் பதிவு கட்டணம் மற்றும் பரிசோதணை முடிவு வர இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டும் மற்றும் தனிப்பட்ட மருத்துவ கருவிகள் (PPE), பிற சோதணைகள் மற்றும் மருந்துகள் என குறைந்தது நாளொன்றுக்கு 60,000 ரூபாவுக்கும் அதிகமாக வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் பல்வேறு மருத்துவமனைகளில் சிறு அளவுகளில் வேறுபட்டாலும் பாதிக்கப்படும் ஏழைகளுக்கோ அல்லது உழைக்கும் மக்களுக்கோ இத்தகைய வசதிகளைப் பெறமுடியாது.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 24 அன்று திடீரென சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் 4 நாட்கள் தீவிர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த உடன், அதிகமான மக்கள் எந்த சுகாதார பாதுகாப்பும் இன்றி காய்கறிகளை வாங்குவதற்கு கோயம்பேடு சந்தைக்கு வந்திருந்தார்கள். மே 5 சந்தை வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே அந்த சந்தை முழுமையாக மூடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மீது குற்றம்சாட்டிய பழனிச்சாமி, வியாபாரிகள் சங்கம் ஒத்துழைக்காததால்தான் கோயம்பேடு வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது, என்றார்.

இங்கு பணிபுரிந்த, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேலைக்கு வந்த ஏழைக் கூலித் தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு போகமுடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். அதன் பின் அங்கு வந்துபோன லாறிகளில் ஏறி ஊர்களுக்கு போய் சேர்ந்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டின் பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கமும் முன்கூட்டித் திட்டமிடாமல் விடுத்த அறிவிப்புகளாலேயே மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடுகின்ற நிலமை ஏற்பட்டிருந்தது.

கோயம்பேடு மொத்த சந்தை வளாகமானது ஆசியாவில் மிகப் பெரிய காய்கறி மொத்த வணிக வளாகங்களில் ஒன்றாகும். 295 ஏக்கர் அதன் நிலப்பரப்பில் 65 ஏக்கரில் 3,941 கடைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் என அனைத்தும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கே வந்து சுகாதாரமற்ற நிலைமைகளின் கீழ் தொழில் செய்கின்றனர்.

பொதுவாக கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 நோய்தொற்று கண்டுபிடித்தால் அவரோடு தொடர்புடையவர்களை கண்டுபிடித்து 20 இலிருந்த 30 நபர்களை பரிசோதித்தால் போதும் என்று அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருந்த இடத்தில் தற்போது கோயம்பேடு சந்தையில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புபட்டவர்களாக 200 இலிருந்து 250 நபர்களாக இருப்பது பரிசோதனையில் மிகப் பெரும் சவாலாக இருக்கிறது என்று திஇந்து பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறது.

சென்னையில் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியான வடசென்னையில் ராயபுரம், திருவிகநகர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பிரதேசங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத அளவுக்கு ஒரு சதுரக் கிலோமீட்டரில் 55,000க்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கமாகவும் சுகாதார வசதிகளற்ற மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கே குறுகலான சந்து, நெருக்கமான சிறிய அறைகளைப் போல உள்ள வீடுகளே அதிகம் காணப்படுகின்றன. அதைப் போன்று ஏழைகள் அதிகமாக செறிந்து வாழும் கண்ணகி நகரிலும் தற்போது கொவிட்-19 பரவிக்கொண்டிருக்கின்றது.

அதிகமான துப்புரவு பணியாளர்களும் இந்தப்பகுதிகளிலிருந்துதான் வேலைக்கு செல்கிறார்கள் என tamil.news18.com குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பணி செய்வதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படவில்லை. மே 8 அன்று, ராயபுரம் பகுதியில் 58 வயதான மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். மே 26 அன்றைய நிலவரப்படி ராயபுரம் பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்து விட்டது.

பணிநிரந்தரம், சம்பள உயர்வு, பாதுகாப்புக் கருவிகள் வேண்டி அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பரவுகின்ற இந்த சமயத்தில் அவர்களின் பல நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய தமிழக அரசு இனிமேல் அவர்களை துப்பரவு பணியாளர்கள் என்பதற்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அரசாணை வெளியிட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை குப்பையில் போட்டுவிட்டார். சென்னையில் 64,000 க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் பணியிலீடுபட்டிருக்கிறார்கள்.

ஒப்பந்த ஊழியர்களான இத்தகைய தொழிலாளர்களுக்கு மரணித்தால் அரசாங்கம் அறிவித்திருக்கும் சிறு உதவிகூட கிடைப்பதில்லை. துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் தமிழகத்திலேயே அதிகம் நடப்பதாக தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில் துப்புரவுப் பணியை தனியார்மயப்படுத்தி வரும் அரசாங்கம், சென்னையில் பல பகுதிகளை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. கோரோனா பரவலைத் தடுப்பதில் முக்கிய பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை மதிப்பதைப் போல் வீடியோக்களை வெளியிட்டாலும், உண்மையில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவ பாதுகாப்பு மற்றும் அவசியமான உபகரணங்கள் ஏதுமில்லாமலேயே வேலை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசாங்கம் பல ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்திருப்பதால், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சிறியளவிலான சிறப்பூதியம் பெறுவதற்கும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சிறப்பு ஊதியத்திற்காகவும், பணிநிரந்தரம் கோரியும் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உயிரைக் கொல்லும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான வெகுஜனப் பரிசோதனை, தனிமைப்படுத்தல், தனிமனித இடைவெளி பேணுதல் மற்றும் கைகளை கிருமிநாசினிகொண்டு கழுவுதல் உட்பட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பத்தில் பசாங்குத்தனமாக செய்துவிட்டு, தற்போது 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவற்றை அலட்சியம் செய்து மக்களை வணிக நலன்களுக்கு பலியாக விட்டிருக்கிறது.

நோய் தொற்று கண்டுபடிக்கப்பட்ட ஆரம்பத்தில் சமூக இடைவெளிமுறையை காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக்கொண்டு பராமரிப்பதாக கூறிய அரசாங்கம், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்தப் பகுதி முழுவதையும் தனிமைப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொற்று நோய் பரவுவதற்கே வழிவகுக்கும்.

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறிவருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவழிவதால், சென்னை வர்த்தக மையம், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருப்பாதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் வெளியில் சென்று வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் கவனக்குறைவாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் 60க்கு மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அதனால் அதிகரித்துவரும் தனிமைப்படுத்தும் பகுதிகளை பாதுகாக்க காவல்துறையினர் பற்றாக்குறையாக இருக்கும்படசத்தில் காவல்துறையினர் மத்தியிலும் அச்சம் நிலவிவருகிறது.

கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பினை சரிசெய்ய மத்திய அரசிடம் கேட்ட தொகையை பெறமுடியாத பட்சத்தில், ஏனைய பா.ஜ.க. ஆட்சிசெய்யும் மாநிலங்களைப் போல் அதிமுக அரசாங்கமும் மதுக் கடைகளை மே 7 அன்று திறந்துவிட்டு மக்களை கூட்டங்கூட்டமாக நெரிசலாக நிற்க அனுமதித்துள்ளது.

எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிகளும் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரம் தேர்தலை இலக்காகக் கொண்டதாகும். தமிழ்நாட்டின் பல மது உற்பத்தி தொழிற்சாலைகள் திமுகவின் பெரும் பணக்கார அரசியல்வாதிகளின் ஆதரவுடனேயே செயல்பட்டுவருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சரியான சாப்பாடு இல்லை, பணமில்லை, பாதுகாப்பில்லை, வேலையில்லை போன்ற பிரச்சனைகளைக் கூறி, தங்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து காவல்துறையினரைத் தாக்கும் அளவுக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துள்ளது.

“நாங்கள் தளர்வுகள் பற்றியும் புலம்பெயர்ந்தவர்களை திரும்ப அனுப்புவதை பற்றியும் பேசுகிறோம். ஆனால் அதைவிட முக்கியம் நாம் வைரஸுடன் வாழப் பழகவேண்டும்” என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியிருக்கின்றார். இது இராட்சத தொழில் நிறுவனங்களின் இலாப நலன்களுக்காக, மக்கள் வைரஸை உடலில் தாங்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டும், முதலாளித்துவ இலாபத்துக்காக தொழிலாளர்கள் உயிரை கொடுக்கவும் தயாராக வேண்டும் என்று உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களைப்போல் தமிழ்நாட்டில் இவ்வாறான நிலைமகைளின்கீழ் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உணவுகளை வழங்காமல் அதிமுக அரசாங்கம் அவர்களை வறுமைக்குள் தள்ளுகிறது. தொழிலாளர்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்துவது கொடிய கொரோனா வைரஸ் பரவும் என்ற மருத்துவ நிபுணர்களின் கூற்றுக்களையும் மறுத்து செயல்படுவதானது பெரும்பான்மை மக்களின் உயிர்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
V Jayasakthi
27 May 2020

https://www.wsws.org/ta/articles/2020/05/28/nadu-m27.html

தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்


தமிழ் நாட்டின் கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கடந்த வியாழன் அன்று, நிருபர் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி கேட்டபோது, “ஏழைகளுக்கு எங்கே இந்த நோய் வந்தது? இது பணக்காரர்களுக்கு வந்த நோய்” எனக் கூறி, தட்டிக் கழித்தார். உலகெங்கிலும் 170,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உழைக்கும் மக்களும், ஏழைகளும் உயிரிழந்திருக்கும் போது, முதலமைச்சரின் இந்தக் கருத்து தொழிலாள வர்க்க உயிர்கள் தொடர்பான அப்பட்டமான உதாசீனமாகும்.

“ஏழைகளைக் கண்டால் தாராளமாக பேசலாம், பணக்காரர்களை கண்டால்தான் பயமாக இருக்கின்றது” என வஞ்சகத்தனமாக கூறிய பழனிச்சாமி பிரதிநிதித்துவம் செய்கின்ற செல்வந்த தட்டின் சொத்துக் கணக்குகள், முதலமைச்சர் ஏழைகள் மீது கொண்டுள்ள “பரிவையும்” தமிழ்நாட்டில் சமூக சமத்துவமின்மையின் கோரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

கடந்த வருடம் பத்திரிகைகளில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் உள்ள முதல் 15 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு, அமெரிக்க டாலர்களில், 217.5 பில்லியன்களாகும். அதில் தமிழ் நாட்டில், HCL நிறுவனர் சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் (Shiv Nadar) இன் சொத்து மதிப்பு மட்டும் 14.4 பில்லியன் டாலர்களாகும். இதேபோன்று, 1969லிருந்து 5 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் வறுமைக்குள் தள்ளிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியின் பேரனான SUN TV குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும். அத்தோடு, தமிழ் நாட்டின் முதல் 14 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய ரூபாய்களில் 215 இலட்சம் கோடிகளாகும்.

இந்தியா முழுவதும் மருத்துவ மற்றும் சமூக நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நாட்டின் செல்வந்தர்கள் குவித்து வைத்துள்ளனர். அத்தோடு, இவர்கள் இலட்சக்கணக்கான கோடிகளை பொது வங்கிகளிடம் கடனாகப் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பாதுகாப்பாகவும் வாழ்கின்றனர். இந்த சூழலில் மருத்துவ பற்றாக்குறை மற்றும் பட்டினி நிலைமைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்காக சீனா மற்றும் முஸ்லிம் விரோத பிரச்சாரமும், இந்த நிதியாளும் தட்டின் ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்படுகின்றது.

முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய அரசிடம் கேட்ட 9,000 கோடி ரூபாய்க்கு வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பணம், 7.7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு நாள் பசியைப் போக்குவதற்கு கூட ஒரு குடும்பத்திற்கு போதாது.

இந்த அவல நிலைமையில், கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைப் பாதுகாக்க, உணவு உட்பட அத்தியாவசியமான மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்ற மற்றும் அவசியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதிக்கு, இந்த கோடீஸ்வரர்களின் நிதியை திருப்ப இலாயக்கற்ற, முதலாளித்துவ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) பழனிச்சாமி ஆட்சி, உலகெங்கிலுமுள்ள தனது சம தரப்பினரைப் போலவே உழைக்கும் மக்களின் முதுகில் மேலும் சுமைகளை ஏற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஏழை எளிய தொழிலாளர்களுக்கு உயிர் காப்பதற்கான பரிசோதனைகள் மறுக்கப்படுவதுடன், தனியார் மருத்துவமனைகள் இந்த இக்கட்டான நிலைமைகளிலும் பணவசதி உடையவர்களின் ஆரோக்கியத்தில் மட்டுமே ”அக்கறை” காட்டுகின்றன. அன்றாட வருமானம் தேடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் முழு அடைப்பின் காரணமாக எந்த வருமானமும் இன்றி, சாப்பாட்டுக்கும் வழியின்றி இருப்பதோடு, அவர்கள் பட்டினி சாவை எதிர் நோக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

முதலமைச்சர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டி, மருத்துவச்சேவை மற்றும் நிதி குறைபாடுகளாலேயே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற உண்மையை மூடி மறைக்க முயற்சித்துள்ளார். “இன்று 62 பேர் குணமடைந்துள்ளார்கள் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் பொசிடிவ் கேஸ்களை நெகடிவ் ஆக்கிவிடுவோம்” என முதலமைச்சர் பெருமிதமாக பேசினார். ஆனால், மறுநாளே புதிதாக நோய் தொற்றிய 56 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஏப்ரல் 19 அன்று மேலும் 105 பேராக அதிகரித்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ் நாட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவியிருப்பதுடன் 22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பரிசோதனைகளின் போதே, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பரந்தளவிலான பரிசோதனைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை மீண்டும் நிரூபிக்கின்றது. எனினும் இன்னமும் பயண வரலாறுகளைக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்துவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டக் கூடும். ஆனால், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 125 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரும்போது யாரைக் காப்பாற்ற வேண்டும், யாரைக் காப்பாற்ற முடியாது என்ற அவலநிலை ஏற்படக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 31 ஆய்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதிலும் 10 தனியாருடையதாகும். இவற்றில் ஒரே நாளில் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யக்கூடிய வசதியுள்ளதாக முதலமைச்சர் கூறிக்கொள்கின்றார். ஆயினும் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் ஞாயிறு வரை 35,036 பேரின் மாதிரிகளே பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்த பாலிமரேசு தொடர் வினை (Polymerase Chain Reaction-PCR) தொழில்நுடபத்தின் மூலமே பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த சோதனை முடிவுக்காக ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்கவேண்டும். அரை மணிநேரத்தில் முடிவைக் கண்டுபிடிக்கும் ரபிட் சோதனைக் கருவிகளை கடந்த வெள்ளிக்கிழமையே தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த கால இடைவெளிக்குள்ளேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 22,074 தனிமைப்படுத்தும் கட்டில்களே இருக்கின்ற நிலையில், அவை போதாததால் மேலும் பாதிக்கப்படும் மக்கள் தொகையின் அதிகரிப்பின் அச்சத்தைக் கணக்கிட்டு இரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்று பொதுநல வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள், உபகரணங்கள், பொது மருத்துவமனைகள், சுகாதார பணியாளர்கள் ஆகியவை பெரும் பற்றாக்குறையாக இருக்கின்ற சூழ்நிலையில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பை தடுக்க முடியாத ஆபத்தான நிலையை மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாடும் எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ் நாட்டு மருத்துவர்கள் சம்பள உயர்வு கோரியும் வேலை நிறுத்தம் செய்திருந்தனர். தமிழ் நாட்டில் 30 அல்லது 40 நோயாளிகளை ஒரு செவிலியர் பராமரிக்க வேண்டிய நிலையில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவரும் ஆபத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தளவு சம்பளம் பெறும் 4700 க்கும் மேற்பட்ட 108 இலக்க ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டமை, அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 900 க்கும் அதிகமான வண்டிகளைக் கொண்டிருக்கும் இந்த சேவை ஜிவிகே ஈஎம்ஆர்ஐ எனும் தனியார் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. பல வருடங்களாக சம்பள உயர்வு, பணிநிரந்தரம், வாழ்க்கைக்கான பாதுகாப்பு உட்பட பல கோரிக்கைகளுக்காக இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்போதும், அனைத்து தொழிற்சங்கங்களால் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்கியிருக்கும் நிலையில் இந்த ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த அற்ப சலுகையும் மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்ட பின்னரும் 1,300 ரூபாயில் இருந்து 1,500 வரை பிடித்தம் செய்துள்ளதால் தொழிலாளர்கள் ஆத்திரமுற்றிருக்கிறார்கள். ஆம்பலன்ஸ் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.

நாங்களோ 10,000 ரூபாய் சம்பளத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல், இரவு பகல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். பணிகள் முடித்து இரவு வீட்டிற்குச் செல்ல பயமாக உள்ளது. நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அது நம் குடும்பத்தாரையும் பாதித்துவிடுமோ என்று அஞ்சி தனிமையில் வாழ்ந்து வருகிறோம், என்று ஒரு ஆம்புலன்ஸ் ஊழியர் ஊடகமொன்றுக்கு கூறியிருக்கிறார்.

வெகுஜனப் போராட்டங்களைப் பற்றி பீதியடைந்துள்ள அரசாங்கம் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மக்களை அடக்கி வைக்க முயல்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தமிழ் நாட்டில் 228,823 பேர் ஊரடங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சத்திற்கும் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செய்திகளின் படி ஒரு கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமி தனது அறிவிப்பில் சிமெண்ட், உரம், நிலக்கரி, இரும்பு, ஜவுளி உள்ளிட்ட 13 வகை ஆலைகளை இயக்கலாம் என உத்தரவொன்றினை வெளியிட்டு, பின்னர் அந்த அனுமதியினை இரத்து செய்திருப்பது தொழிலாளர் மத்தியில் உள்ள கோபத்தின் வெளிப்பாடாகும். தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தினை மேற்கொள்வார்கள் என்றும், வருமானம் இன்றி சீற்றமடைந்திருக்கும் பல மில்லியன் ஏழைகள் அடுத்தகட்டமாக தங்களது தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று ஆளும் தட்டு அச்சமடைந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், அகதிகள், அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் பெரும்பான்மை ஏழைகளைக் கொண்ட நாட்டில், எந்த முன்னேற்பாடுகளும் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள், காய் கறிகளின் விலை அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் வருமானமின்றி இருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பட்டினி மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்களை வாங்க முடியாமல் இருக்கின்றனர்.

நகரங்களில் வேலை இழந்து, உறங்க இடம் மற்றும் உணவு இன்றி தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பரிசோதிக்கப்படாத காரணத்தினால் கிராமங்களிலும் வைரஸ் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.. பெரும்பாலான கிராமங்களில் இத்தகைய அபாயத்தை சமாளிக்ககூடிய மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவமனைகள் கிடையாது.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெரும் முதலாளிகளின் அழுத்தத்தின் கீழ் அரசாங்க வழிகாட்டலுடன் 15,000 க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட ஏழைத் தொழிலாளர்கள் முழு அடைப்பையும் மீறி, வைரஸைத் தடுப்பதற்கான எந்த பாதுகாப்புமின்றி வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகத்திற்கு விசுவாசமாக செயல்படும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உயிர்வாழ்வை அலட்சியம் செய்து அவர்களை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளன.

சுமார் 75,000 தொழிலாளர்களுக்கும் அதிகமாக பணிபுரியும் தேயிலைத் தோட்ட ஆலைகள் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்காத காரணத்தால் சிறு உதவி கூட தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையிலிருக்கும் தொழிலாளர்களிடம் தாமாக விரும்பியே வேலை செய்கிறோம் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை என்று எழுதி கொடுத்த பின்பே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக முதலாளிகளுக்கு சார்பாக தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளும் அஇஅதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க பேரவை, எதிர் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முற்போக்கு முன்னணி, காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய தொழிற் சங்க காங்கிரஸ், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

ஒரு தோட்டத் தொழிலாளியான ஆறுமுகம் newsclick.in எனும் ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாவது: “அடைப்புக்கு பிறகு நான் வேலைக்குப் போகவில்லை. இருப்பினும், நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் அநேகமான தொழிலாளர்கள் பணியைத் தொடர்கின்றனர். நிறுவனங்கள் தொழிலாளர்கள் கை கழுவுவதற்கு தண்ணீர் மற்றும் சனிடைசர்களைக் கூட கொடுக்கவில்லை. வைரஸ் பரவுகிறது என்ற அச்சம் இருக்கும்போது, நிறுவனங்களால் இலாபத்திற்காக தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்.”

கேரள மாநில எல்லையில் இருக்கும் தேனி மாவட்டத்தில் ஏலக்காய் பயிரிடும் சுமார் 40,000 விவசாயத் தொழிலாளர்கள் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் வருமானமின்றி வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதங்கள் செடிகளுக்கு தண்ணீர் விடாவிட்டால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்று சிறு விவசாயிகள் மேற்கண்ட அதே ஊடகத்திற்கு கூறியிருக்கிறார்கள். குறைந்தது தகுந்த பாதுகாப்புடன் ஒரு நபரையாவது அங்கு சென்று பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களை விவசாயிகள் கேட்டுள்ள போதும், அனுமதி கிடைக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிற்துறை நட்டமடைவதை அனுமதிக்காத அரசாங்கம், மிகச் சிறு விவசாயிகளின் இழப்புக்களைப் பற்றி அக்கறைப்படவில்லை.

V.Jayasakthi
23 April 2020

https://www.wsws.org/ta/articles/2020/04/23/nadu-a21.html

தமிழ்நாட்டில் மருத்துவ வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு மாநிலம் வெள்ளிக்கிழமையுடன் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. வெள்ளியன்று வைரஸால் பாதிக்கப்பட்ட 102 பேரும் சனிக்கிழமை 74 பேரும் அடையாளம் காணப்பட்டதோடு தமிழ் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இக் கட்டுரை எழுதப்படும் வரை 571 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,588 ஆக இருப்பதோடு இதுவரை இந்தியாவில் 99 பேர் உயிரழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், கரூர், அரியலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அந்தப் பிரதேசங்கள் பூட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் படி, சந்தேகத்தின் பேரில் 9,412 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, 90 ஆயிரம் பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

“தமிழகத்தில் பாசிடிவ் கேஸ்களில் இதுவரை ஒரே ஒரு இறப்புத்தான் பதிவாகி உள்ளது. மற்றப்படி நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள், யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவையில்ல. எனவே இது பயப்படக்கூடிய ஒரு நோய் கிடையாது,” என ராஜேஷ் கடந்த வாரக் கடைசியில் கூறிக்கொண்டிருக்கும் போதே, மறுபக்கம் கடந்த இரண்டு நாட்களில் 175 பேருக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இன்னும் ஐவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் 25,557 குடும்பங்களைச் சேரந்த 95,692 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதால் 22 இடங்கள் யாரும் வெளியேறாதவாறு சீல் வைக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மிக மிக நெருக்கமாக வாழும் குப்பம் மற்றும் சேரிப் புறங்களில் தொற்று ஏற்படின் விளைவுகள் மிகப் பாரதூரமானதாக இருக்கும்.

மூன்றாவது நபர் இறந்த பின்னர், பீலா ராஜேஷ், “நோயாளிகளின் நிலை திடீர் திடீரென மாறுபடுகிறது, எந்த நேரத்தில் எந்த மாதிரியாக மாறும் என கணிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தாலும், தமிழ்நாட்டில் நோய் இன்னும் சமூகப் பரவல் அடையவில்லை, இரண்டாம் கட்ட நிலையிலேயே நாம் உள்ளோம் என இன்னமும் கூறிக்கொண்டிருக்கின்றார். பாதிக்கபட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து புதுடெல்லிக்கு ஒரு மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்களே என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், மதுரையில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த பயண வரலாறும் இல்லை என்பது சமூகப் பரவலுக்கான அறிகுறியே ஆகும்.

இந்த அபிவிருத்திகள், பெருமளவிலான வெகுஜனப் பரிசோதனைகளை நடத்தாமல் வெறும் அறிகுறியுள்ளவர்களை மட்டுமே பரிசோதனை செய்வதால் நோயின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று பல்வேறு நிபுணர்கள் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைகளை நிரூபிப்பதாகவும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

நகர்ப்புறத்தில் மக்கள் செறிந்து வாழும் நிலையிலும், ஏற்கனவே தண்ணீர் மற்றும் மருத்துவம் உட்பட சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுகின்ற நிலையிலும் இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் போலவே தமிழ் நாட்டிலும் தொற்று வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. தொற்று நோயை எதிர்கொள்ளவும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பாதுகாக்கவும் இலாயக்கற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் (அ.இ.அ.தி.மு.க), இப்போது தமிழ்நாட்டில் அரைகுறையாக 23,689 தனிமைப்படுத்தல் படுக்கைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது. இதில் இரயில் பெட்டிகளும் அடங்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனத்தொகை ஏழு கோடிக்கும் அதிகமாக இருக்கின்ற ஒரு மாநிலத்தில் சிகிச்சைக்காக 3,396 வென்டிலேட்டர்களே இருப்பில் உள்ளன. செய்திகளின் படி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டில், இரத்த மாதிரிகளை மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்புவதற்காக, இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கான உபகரணப் பொதி (கிட்) இல்லாமையால், 10 நோயளர்கள் இரண்டு நாட்களாக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டு அரசாங்கம் 21 அரசாங்க வைத்தியசாலைகளை மட்டுமே கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ள அதேவேளை, வசதிபடைத்தவர்கள் கட்டனம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு 112 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியளித்துள்ளது. பரிசோதனைக்காக 17 ஆய்வுக்கூடங்களே ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை அதிலும் 6 தனியார் ஆய்வுக்கூடங்களாகும். தனியார் ஆய்வுக் கூடங்களில் ஏழைகளுக்கு நெருங்க முடியாதளவு 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எல்லா வகையிலுமான முகக்கவசங்கள் மூன்றரை இலட்சத்துக்கும் குறைவாக இருப்பதோடு மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமாரின் படி 55 இலட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் வாங்குவதற்கே உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவில் தமிழ் நாட்டில் பல இலட்சம் பேருக்கு முறையான தண்ணீர் வசதி இல்லாத நிலையில் மக்கள் தங்களை துப்புரவாக வைத்துக்கொள்வதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த செய்திகள் தமிழ்நாட்டில் மருத்துவ வசதிகள் எந்தளவுக்கு பற்றாக்குறையாக இருக்கின்றன என்பதற்கான சிறு உதாரணம் மட்டுமே.

அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் எந்த திட்டமிடலும் இன்றி, திடீரென அறிவிக்கப்பட்ட மூன்று வார ஊரடங்கில் சிக்கிக்கொண்டவர்களில், அத்தியாவசிய பொருட்களை தேடி வெளியில் வர நிர்ப்பந்திக்கப்படுபவர்கள் மீது பொலிஸ் பாய்கின்றது. ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக சனிக்கிழமை வரை 64,733 பேர் கைதுசெய்யப்பட்டு 58,440 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீதிகளில் வைத்து பொலிசாரால் கம்பு மற்றும் தடிகளால் அடித்து விரட்டப்படுகின்றனர்.

ஒடுக்குமுறைகளை கொடூரமாக்க முடிவெடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும்” எனக் கூறி, வெளியில் வருவோருக்கு சாட்டையடி கொடுக்க பிரேரித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஊரடங்கை மீறுவோரை ஆறு மாதம் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக தனி சிறைகளும் உருவாக்கப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத்தியிலுள்ள இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனாதா கட்சி அரசாங்கத்தின் கைப்பாவையாக இருக்கும் தமிழ்நாட்டிலுள்ள மதிப்பிழந்துபோன அ.இ.அ.தி.மு.க அரசாங்கமானது, பிரதமர் நரேந்திர மோடி, இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அகல் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிர்ப்புக் காட்டும் மத்தியகால மூட நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததை தவிர வேறு எந்த உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை. மோடி அரசாங்கம், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புக்கு, அமெரிக்காவின் முன்னரங்க நாடாக இந்தியாவை மாற்றியிருப்பதோடு, கடந்த பெப்ரவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு நாட்கள் இந்திய பயனத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்தது. ஆனால், உழைக்கும் மக்களின் அவசியத் தேவைகள் இந்த ஆளும் தட்டுகளால் அலட்சியம் செய்யப்படுகின்றன.

வருடத்திற்கு 17.25 இலட்சம் கோடி வருவாயை ஈட்டிவரும் அ.இ.அ.தி.மு.க அரசு, ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்குவெறும்1000 ரூபாய் இலவச அரிசியும், பருப்பும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அப்படி வழங்கப்படும் இந்த அரசியும் தரமில்லாதது என பலர் ஊடகங்களுக்கு புகார் தெரிவித்துள்ளார்கள். திடீர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட கூலியை நம்பி வாழும் பல மில்லயன் பேரின் கோபத்தை தணிக்கும் முயற்சியில் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொருட்கள், மக்களின் தேவையுடன் ஒப்பிடும் போது, மிக அற்பமானதாகும். இத்தகயை சூழ்நிலையிலேயே 2.85 இலட்சம் ஆட்டோ சாரதிகள் உட்பட ஆட்டோ பழுது பார்ப்போருடன் சேர்த்து 3.5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு வாழ்வதற்காக 5,000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திடீர் முடக்கத்தினால் எல்லா மாநில தொழிலாளர்கள் போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் வேலையிழந்தும் கூலியிழந்தும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறை, தினக்கூலிமுறை என வேலை வழங்கிய அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வருமானத்தை இழந்து தங்கள் கிராமங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள் சாரை சாரையா தங்கள் ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் இடம் கிடைக்காமல் முண்டியடித்துக் கொண்டனர். வைரஸ் பரவுவதை தடுக்க விலகியிருக்குமாறு அறிவுறுத்தும் மத்திய மாநில அரசாங்கங்கள் இந்த தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்காமல் குற்றவியல் தனமாக ஆபத்தில் தள்ளிவிட்டன.

உலக சோசலிச வலைத்தள நிருபர்களுடன் பேசிய தொழிலாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்களின் முன்திட்டமின்மை மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்த அவற்றின் அலட்சிய போக்குகள் பற்றி விமர்சித்தனர்.

ரெனால்டு நிசான் வாகன கம்பனியின் தொழிலாளியான சிறிதர், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு நெரிசாலான பேருந்தில் போயிருக்கிறார். “வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சரியாகிவிடும் என்று முதலமைச்சர் கூறுவதற்கு மாறாகவே நிலைமை இருக்கின்றது. நகர்புறத்தில் கூட்ட நெரிசல் பகுதிகளைப் போலவே கிராமத்திலும் பாதுகாப்பற்ற குடிசைப் பகுதிகள் உள்ளன. இங்கும் வைரஸ் பரவுவது சாத்தியமே. அரசாங்கம் தனிமைப்படுத்துவதைப் பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் கூட்ட நெரிசலிலேயே ஊருக்கு வந்துள்ளோம், இதனாலும் நோய் பரவியிருக்கும் என்ற அச்சம் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

சென்னையிலுள்ள தாய் சுமித் நிறுவனத்தில் 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரியும் ராஜதுரை, தங்கள் நிறுவனம் விடுமுறை காலத்துக்கு சம்பளம் வழங்குமா என்பது நிறுவனம் திறக்கப்படும் போதுதான் தெரியும் என்றார். “நான் நெரிசலில் கிராமத்திற்கு வந்துள்ளேன். இந்த சம்பளத்தை நம்பித்தான் எனது பெற்றோகளும் நானும் வாழவேண்டும். இருக்கும் பணமெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கை கடினமாகிவிடும்” என்று விளக்கினார்.

மாத சம்பளமாக 12,000 ரூபா பெறும் மதர்சன் தொழிலாளியான வேதமூர்த்தி, பணிபுரியும்பொழுது முகக்கவசமோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களையோ நிறுவனம் வழங்கவில்லை, இந்த சம்பளத்தில்தான் எனது குடும்பமும் பெற்றோர்களும் வாழவேண்டியிருக்கிறது. இந்த ஊரடங்கு நீடித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்கள் மகாராஷ்ரா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற பல்வேறு வெளி மாநிலங்களிலும் வேலைசெய்கின்றனர். இவர்கள் வேலையின்றியும் சொந்த ஊருக்கு வரமுடியாமலும் தவித்துவருகின்றனர். மஹாராஷ்ராவில் இருந்து கால்நடையாக வர முயற்சித்த தமிழ்நாட்டு இளைஞர் குழுவில் 23 வயது இளைஞர் ஒருவர் இடைநடுவில் மாரடைப்பால் மரணித்துள்ளார்.

மறுபக்கம், இந்தியாவின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் (பெரும்பாலானவர்கள் கட்டிட தொழிலாளர்கள்) போக்குவரத்து இன்றி தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். சில தன்னார்வ அமைப்புக்கள் அவர்களை மண்டபங்களில் தங்கவைத்து உணவு வழங்கிய போதிலும் அவை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. தாம் உணவு தேடி வெளியில் வந்தால் காவல்துறையினர் மோசமாக தாக்குவதாக அவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

பல நிறுவனங்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்கியிருக்கவில்லை. தங்களுக்கு மூன்றுவாரங்கள் சம்பளம் வழங்கவில்லை என்று, பல்லடத்தில் பனியன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு வந்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என தேயிலை தோட்ட நிர்வாகம் கூறியிருக்கிறது.

இலங்கையில் மூன்று தசாப்த கால உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் முகாம்களில் மிக நெருக்கமாக வாழும் பல இலங்கை தமிழ் குடும்பங்கள், கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரும் பாதிப்புகள் உருவாகும் என அச்சம் தெரிவித்துள்ளன. மதுரை மாவட்டத்திலிருக்கும் அஸ்தின்பட்டி மற்றும் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகள், தங்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க தண்ணீர் விநியோகிக்கவோ, கிருமிநாசினி தெளிப்பதற்கோ அரச அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்றும் தனிமைப்படுத்துவதற்றான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Jayasakthi and Sasi Kumar
6 April 2020

https://www.wsws.org/ta/articles/2020/04/06/coro-a06.html