ஜெய்பீம்... நடிகர்களின் சிறந்த நடிப்புகளுக்கு அப்பால்... ஆட்சியாளர்கள் மீதும், காவல்துறையினரின் மீதும் குறிப்பாக ஒடுக்குகின்ற பெரும் பணக்காரர்களுக்கு எதிராக சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே இருக்கின்ற சமூக எழுச்சியின் அலையை மேலும் தூண்டுவதாக அமைந்துவிடும் என்பதால் அதைத் சாதிப் பிரச்சனையாக திசைதிருப்பி ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், ஏழைகள் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களைப் பிரிக்கும் ஒரு தந்திரச் செயலாகத்தான் தமிழ்நாட்டு முதலாளித்துவ தட்டுக்களும், பெரும் பணக்கார சாதிய அரசியல்வாதிகளும், நடிகர்களும் அதனைக் கையில் எடுத்து திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்ற எத்தகைய மோசமான வன்முறை நடவடிக்கைகளையும் செய்யும் என்பதை திரைப்படத்தில் வராத எத்தனையோ சாட்சிகள் எம் கண்முன்னே இருக்கின்றன.
Advanced working class can do change the world - முன்னேறிய தொழிலாள வர்க்கத்தால் உலகை மாற்றச்செய்ய முடியும்
Sunday, 28 November 2021
ஜெய்பீம் திரைப்படமும் தூண்டிவிடப்பட்ட சாதிய அரசியலும்
ஜெய்பீம்... நடிகர்களின் சிறந்த நடிப்புகளுக்கு அப்பால்... ஆட்சியாளர்கள் மீதும், காவல்துறையினரின் மீதும் குறிப்பாக ஒடுக்குகின்ற பெரும் பணக்காரர்களுக்கு எதிராக சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே இருக்கின்ற சமூக எழுச்சியின் அலையை மேலும் தூண்டுவதாக அமைந்துவிடும் என்பதால் அதைத் சாதிப் பிரச்சனையாக திசைதிருப்பி ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், ஏழைகள் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களைப் பிரிக்கும் ஒரு தந்திரச் செயலாகத்தான் தமிழ்நாட்டு முதலாளித்துவ தட்டுக்களும், பெரும் பணக்கார சாதிய அரசியல்வாதிகளும், நடிகர்களும் அதனைக் கையில் எடுத்து திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்ற எத்தகைய மோசமான வன்முறை நடவடிக்கைகளையும் செய்யும் என்பதை திரைப்படத்தில் வராத எத்தனையோ சாட்சிகள் எம் கண்முன்னே இருக்கின்றன.
Saturday, 18 September 2021
சமூக நீதி என்ற பெயரில்
பெரியார் 143வது பிறந்த நாள் தினத்தன்று அதை சமூக நீதி நாளாக தமிழ்நாடு திமுக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. யாருக்கான சமூக நீதி என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலிருக்கும் ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகிற மக்களிடமிருந்து சமூக நீதி பெரிதாக வெறுபட்டிருப்பதாக அடையாளப்படுத்த முடியவில்லை.
ஆட்சி மற்றும் பதவிகளிலிருந்த பிராமணர்களின் அதிகாரமும், பிராமணரல்லாத மேற்தட்டு சாதியினராலும் தொழிலாளவர்க்கம் முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டப்படுகிற சமூக அமைப்பாகத்தான் மாறியிருக்கிறது. ஒடுக்கப்படுகிற, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளைக் கண்டு பிராமணரல்லாத சாதிய உயரடுக்கினர் அரசாங்கங்களுடன் சேர்ந்து நசுக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
முதலாளித்துவ அமைப்பு தனது லாபத்திற்காக பழைய தொழில்முறைகளை அழித்து நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிலாளர்களை அணிதிரட்டும் இடத்தில்தான் சாதி, இன, மதங்களை கடந்து தொழிலாளர்களாக ஒன்று சேர்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகளை முதலாளிகள் திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறார்கள்.
சமூக நீதி பேசப்படுவதற்கு பின்னால் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளில் இருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் சாதிய வெறியர்களாகவும், சாதியத் தலைவர்களாகவும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்கள் பெருநிறுவன முதலாளிகளின் நலன்களுக்கான அரசமைப்பில் தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான கட்சியின் தலைவர்கள் என்று கூறுபவர்கள், பிராமணர்களை எதிர்த்தும் அதற்காக கடவுள் மறுப்பு பேசுகின்ற முற்போக்கானவர்கள் என்று கூறும் தமிழ்தேசியவாதிகள், திராவிடர்கள், நாம் தமிழர் கட்சி போன்ற வகுப்புவாதிகள் மற்றும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான வர்க்க போராட்டத்தை மறுத்து புதிய ஜனநாயகப் புரட்சி, முதலாளித்துவ புரட்சி என்று கூறிக்கொண்டு தொழிலாளர்களை திசைதிருப்பிக்கொண்டு முதலாளிகளுக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ராலினிச சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மற்றும் மாவோயிச அமைப்புகள், முற்போக்கு பேசுகின்ற முதலாளித்துவ திமுக மற்றும் அஇஅதிமுக மற்றும் மதவாத பாஜக, முதலாளிகளின் ஆசிர்வாதம் பெற்ற காங்கிரஸ் மற்றும் பிற மாநில பிராந்தியவாத கட்சிகளாலும் சமூக நீதியை கொண்டுவரமுடியாது. தொழிலாளர்களை பிரித்தாளும் திட்டமே அவர்களின் முதல் வேலையாக இருக்கிறது.
பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களின் வரலாறுகளை படித்தால் அவர்கள் பிராமணரல்லாத பிற சாதிய மேற் தட்டுக்களுக்கே சேவகம் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட குறிப்பாக தொழிலாளர்களின் எழுச்சிகளை அடையாளம்கண்டு அதை திசைதிருப்பி முதலாளித்துவ அமைப்பை பாதுகாத்திருக்கிறார்கள். முதலாளித்துவ அரசியல் கட்சித் தலைமைகளிடம் கோரிக்கை வைத்துக்கொண்டும், அதை விமர்சித்துக்கொண்டும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்றும் அதே அரசியல் அமைப்பை பாதுகாக்கும் பங்காளிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.
சமூக நீதி என்பது சமூக சமத்துவத்தில்தான் தங்கியிருக்கிறது அதை இந்த முதலாளித்துவாதிகளிலாலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் புகழும் நடுத்தர படித்து முற்போக்கு பேசும் குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களாலும், ஸ்ராலினிஸ்டுகளாலும், போலி இடதுகளாலும் செய்யமுடியாது என்பதை அடித்துக் கூற முடியும்.
சமூக சமத்துவத்திற்கு ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் இணைந்து இந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதில்தான் தங்கியிருக்கிறது.
#சமூகநீதி #பெரியார் #திமுக #அஇஅதிமுக #சாதி #தமிழ்நாடு #தொழிலாளர்கள் #ஏற்றத்தாழ்வு
Saturday, 4 September 2021
மாற்றத்தை யார் தருவார்கள்?
படம்: wsws.org
முதலாளித்துவ ஆட்சியாளர்களாலும், தேசியவாதிகளாலும் மற்றும் வகுப்புவாதிகளாலும் உழைக்கும் மக்களின் துன்பங்களுக்கு விடிவு கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் மார்க்சிஸத்தை நோக்கித்தான் போவார்கள். அங்கே போலி மார்க்சிஸ்டுகளும் ஸ்ராலினிஸ்டுகளுமே இருக்கிறார்கள் என்பதை காலம் கடந்தபின்னர்தான் தெரியவருகிறது. அந்த போலிகளின் அரசியல் நடவடிக்கைகள் மேல் நம்பிக்கை இழந்து போகச் செய்வதுடன், சமூகத்தின் நெருக்கடி நிலைமைகளால் விரக்தியும் வேதைணையுமே ஏற்படுகிறது.
உழைக்கும் தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களாலும் முதலாளிகளிளாலும் சுரண்டப்படுவதிலிருந்து விடுபட எந்த பாதையும் இல்லாமல் தவிக்கவிடப்பட்டிருக்கின்றனர். முதாலாளிகளின் லாபங்கள் அதிகரிப்புக்கு தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை வறுமைக்குள் வைத்திருக்கின்றனர்.
ஆனால் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, எழுச்சிகள் வெடிக்கின்றன. நாளுக்கு நாள் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முதலாளிகளைக் காப்பாற்ற சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதனை வெட்டவெளிச்சமாக்கியிருந்தது. உலகளவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் அதே நெருக்கடியிலும், போராட்ட குணத்துடனும்தான் இருக்கிறார்கள். நிச்சயம் கேள்விகளுக்கு விடைகள் இருக்கவே செய்யும் என்ற தேடல் ஏற்படுகிறது.
மாபெரும் புரட்சியாளன் லெனினுடன் ரஷ்யப் புரட்சியில் ஈடுபட்ட ட்ரொட்ஸ்கி என்கிற புரட்சியாளனின் போராட்டங்களும், மார்க்சிஸ ஆய்வுகளும் எம்மை வந்தடைகின்றன. அந்த வரலாற்றை படிப்பதற்கு முன்னால் ட்ரொட்ஸ்கி என்கிற பெயரும், அதன் மீதான நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இங்கே ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை இருட்டடிப்பு செய்ததுடன், அவரை கருங்காலி, தொழிலாள வர்க்கத்தின் எதிரி, ஏகாதிபத்திய கைக்கூலி என்ற அவர்மீதான கரிபூசல்களை ஸ்ராலினிஸ்டுகளும், முதலாளித்துவ வாதிகளும் தாங்கள் கொண்டிருந்த ஊடக பக்கபலத்தால் செய்ய முடிந்திருக்கின்றன.
எவைகளைக் கொண்டு ட்ரொட்ஸ்கிக்கு எதிராக பயன்படுத்தினார்களோ அதனை அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்களால் இன்று மறைக்க முடியாமல் இருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுப்பதிலிருந்து ஏகாதிபத்தியங்களின் நடவடிக்கைகளுக்கு ஊதுகுழல்களாகவும் இருந்து செயல்படுகின்றனர். தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளிகளுடன் சேர்ந்து நசுக்குகின்றனர். ஆனால் அதனை எதிர்ப்பதுடன் எந்தவித சமரசத்திற்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தொழிலாளர்களின் தலைமையில் சோசலிச புரட்சிக்காக போராட வேண்டும் என்ற மார்க்சிஸ்டுகள் இல்லையா?
உண்மைகளைத் தேடுகிறவனுக்கு உண்மைகள் தானாக வரும் அப்படி வந்ததுதான் மார்க்சிஸத்தின் மெய் நாடியாக இருந்து போராட்டத்தை நடத்தும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் கட்டப்பட்ட நான்காம் ஆகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் உலக சோசலிச வலைத் தளமும் (wsws.org). சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை வெளியிடுவதுடன் தொழிலாளர்கள் சோவியத்துக்கள் போல தங்கள் வேலைத் தளங்களின் நடவடிக்கை குழுக்களை கட்டுவதற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பயிற்சி கொடுத்து உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சோசலிசப் புரட்சிக்கு தயார் செய்கிற ஒரு போராட்டத்தை அது மட்டுமே இன்று நடத்துகிறது. வரலாற்று ரீதியான ஆய்வுகளையும், தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் சமகால போக்குகளையும் மிகத் துல்லியமாக ஆய்வு செய்துவருகின்றது. இதை வேறு எந்த அமைப்பினரோ அல்லது கட்சிகளோ செய்யவில்லை. வாழும் காலத்தில் ட்ரொட்ஸ்க்கிச போராட்டத்தின் தொடர்ச்சியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறேன் என்று ஏராளம் தோழர்கள் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையாக இருக்கிறார்கள்.
சமூக மாற்றத்திற்கான கேள்விக்கு உண்மையான விடையை தேடுபவர்களாக இருந்தால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் பகுதியை கட்டுவதற்கு சேர முயற்சிக்கவும். முதலாளித்துவ ஆட்சியாளர்களும், முதலாளிகளும் இனிவரும் காலங்களில் என்ன செய்வார்கள் என்பதை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே நன்கு தெரிந்தவர்களாகவும் அதனை எதிர்ப்பதற்கான போராட்ட வழிமுறைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
மாற்றத்திற்கான பாதையில் இணையப் போகிறோமா? இல்லை வீடு எரிகிறதே என்று புலம்பிக்கொண்டிருக்கப் போகிறோமா? முடிவு உன் கையில்தான் உள்ளது.
Sunday, 29 August 2021
தமிழ்நாடும் தமிழ் அகதிகளும்
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு 317 கோடியில் சிறப்புத் திட்டங்கள், படிப்பதற்கு உதவிகள், அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் என நடவடிக்கைகள் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் மூன்று தலைமுறைக்கு மேலாக வாழும் அகதிகள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களில் ஒரு பகுதியாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள்.
அவர்களின் பிள்ளைகள் படித்து பட்டங்கள் பெற்றாலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருகின்றன. படித்து வேலைகிடைக்காத பல ஆயிரக்கணக்கானவர்கள் பெயின்ட் அடித்தல், கடைகளில் வேலை என்று அன்றாட கூலி வேலைக்கு செல்லத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிற முதலாளிகளிடமிருந்து எந்த பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. திமுக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அகதிகள் மீது ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் அவர்களின் அரசியல் நலன்களுக்கான ஒரு பொருளாக இந்த அகதிகளை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
மூன்று தசாப்தங்களுக்கு மேல் நாடற்றவர்களாக வாழும் இவர்கள் போர்களத்தில் உயிரைக் காப்பாற்ற ஆபத்தான படகு பயணத்தின்மூலம் வந்தவர்களை திருட்டுவழியாக வந்தவர்கள் என்று இந்திய முதலாளித்துவ காங்கிரஸ் மற்றும் இந்துமேலாதிக்கவாத பாஜக தலைமையிலான மத்திய / ஒன்றிய அரசாங்கங்கள் மறுப்பதும், குடியுரிமைக்காக போராடுவதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கூறிக்கொண்டிருப்பது தமிழ் அகதிகளின் மீதான அக்கறையில் இல்லை அது அவர்கள் கொண்டிருக்கிற அரசியல் காரணங்களுக்கானதாகும்.
இந்தியா கொண்டிருக்கிற பூகோள மூலோபாய கொள்கைகளுக்கு மாநில அரசாங்கங்கள் அகதிகள் மீதான அரசியலை நடத்துகின்றன. அகதிகளை சீனா ஆதரவு இலங்கைக்கு எதிராக விடுதலை இயக்கங்களாக உருவாக்குவதும் அல்லது இலங்கை அரசை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான கருவியாக பயன்படுத்தலாம்.
சந்தேகத்தின்பேரில் தமிழ் அகதிகள் சிறப்புமுகாம் என்ற முகாமுக்குள் ஆயுள் தண்டனை அனுபவித்திக்கொண்டிருக்கும் அகதிகளை தண்டிப்பதானாலும் சரி அல்லது அகதிகளின் பிரச்சனைகளில் ஈடுபடும் அகதிகளை முகாம் விட்டு முகாம் அல்லது சிறப்புமுகாமுக்குள் தூக்கியடிப்பதானாலும் சரி எந்தவிதமான மனித உரிமை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கம் பேணுவதில்லை. அதற்கு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்டு சிபிஐ மற்றும் சிபிஎம் மற்றும் சாதியவாத, வகுப்புவாத கட்சிகள் அரசுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அல்லது அரசின் கருவிகளாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இன்று உலகம் முழுக்க வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்ட அகதிகள் 82.4 மில்லியன் ஆக இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவிக்கிறது. அதிலும் 35 மில்லியன் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருக்கின்றனர். அகதிகள் வறுமைநிலையிலான வாழ்க்கை, கொரோனா வைரஸ் தொற்றுக்கள், வேலைவாய்ப்பின்மை என பல்வேறு நெருக்கடிகளை முகம்கொடுக்கின்றனர். அவர்களை கூலித் தொழிலாளர்களாக பயன்படுத்தும் முதலாளிகள் பெரும் லாபத்தையீட்டி வருகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான எந்தவிதமான சமூக பாதுகாப்பும் இல்லை. அகதிகளை உருவாக்குவதும், அவர்களை நாடற்றவர்களாக, குடும்ப உறவினர்களை பிரிந்தவர்களாக்குவதும் முதலாளித்துவ அரசாங்கங்களின் லாப நோக்கு மற்றும் போர்கள் என அவர்கள் கொண்டிருக்கும் தவிர்க்கமுடியாத கொள்கைகளிலிருந்தே வருகின்றன.
இந்தியாவில் அன்றாடம் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை நெருக்கடிகளையும் அகதிகள் முகங்கொடுக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை இந்திய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சியிலும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச புரட்சி போராட்டத்திலும் தங்கியிருக்கிறது. இந்திய மற்றும் தமிழ்நாடு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அகதிகளுக்கு அல்லது உழைக்கும் மக்களுக்கு பூரணமான ஜனநாயக கோரிக்கைகளை ஆற்றுவதற்கு லாயக்கற்று இருக்கின்றனர். அவர்கள் முதலாளிகளின் லாப நோக்கங்களுக்கான அரசியல் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
#தமிழ்நாடு #இந்தியா #தமிழ்அகதிகள் #அகதிகள்முகாம் #அகதிமாணவர்கள் #அரசியல்
படம்; இந்தியாடுடே
Monday, 28 June 2021
சீமானும் ஸ்டாலினும் சந்திப்பு

படம்; ஆனந்தவிகடன் (யூன் 4 2021)
கேள்வி எழவில்லையா?

டார்கெட் முடித்தாகனும்
மனேஜர்களும், முதலாளிகளும் இந்த மாத டார்கெட் முடித்துவிடவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறுவனங்களில் கடுமையாக குறைவான கூலிக்கு உழைக்கின்ற தொழிலாளர்களை வெறும் இயந்திரமாகத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பல #தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதால் அவர்களை அடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த தொழிலாளர்கள்தான் தங்கள் கடின உழைப்பை செலுத்தி அவர்களின் டார்கெட்டை முடித்துக்கொடுக்கிறார்கள். தனது #உழைப்பு சக்தியை #குறைந்த #கூலிக்கு விற்கும் தொழிலாளியால் அந்த பொருளில் உரிமைகொள்ள முடியாமல் போகிறது. எந்த உழைப்பையும் செலுத்தாமல் வெறும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியும் வழங்காமல் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் ஆடம்பரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஆட்சியாளர்களும், காவல்துறை, நீதிமன்றம் என அனைத்தும் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. இந்த முதலாளித்துவ வர்க்க சுரண்டலிலிருந்து தொழிலாளவர்க்கம் விடுதலை பெறுவது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படும் நனவான அரசியல், தத்துவத்தின் வளர்ச்சியில்தான் தங்கியிருக்கிறது. ஆனாலும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமான போராட்டம் உலகெங்கிலும் போல இந்தியாவிலும் வெடிக்கத்தொடங்கிவிட்டன.
Wednesday, 14 April 2021
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வகுப்புவாதத்தை தூண்டுகிறது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலைமையில், செந்தமிழன். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க) தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் (பாண்டிச்சேரி) 28 தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தி, தமிழ் நாட்டை தமிழர்களே ஆழவேண்டும் என்ற பிற்போக்கு தமிழ் வகுப்புவாத கருத்தியலை மையமாக வைத்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில், இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்துக்கு எதிராக, முன்னொருபோதும் இல்லாத வகையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட, நாடு தழுவிய போராட்டங்கள் மேலும் அபிவிருத்தியடைந்துவரும் ஒரு நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்தப் பிரச்சாரம் தொழிலாளர்களை இன ரீதியாக பிளவுபடுத்துகின்றது.
கோவிட்19 பெருந் தொற்றுநோய், இந்தியா உட்பட உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் மனித உயிர்களை விட பெரும் வணிக இலாபத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றன என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுடன், வர்க்கப் போராட்டங்களையும் மேலும் தூண்டி விட்டுள்ளது. இந்தியாவில் நடந்துவரும் போராட்டங்கள் இதன் பாகமாகும். ஆளும் தட்டுகளிடம் மரணத்தை விளைவிக்கும் இந்த தொற்றுக்களுடன் கூடி வாழுதல் என்ற சமூகப் படுகொலை கொள்கையை தவிர வேறெதுவும் கிடையாது என்பதை அண்மைய தேர்தல் நிகழ்வுகள் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தக் கொள்கையின் பாகமாக பள்ளிகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வணிக நிறுவனங்களை திறந்து வைத்து, ஆட்சியாளர்கள் நாட்டை இயல்பு நிலையில் வைத்திருக்கின்றார்கள். இந்தியாவில் மரணம் 163 396 யும் தாண்டிவிட்டது. எந்தவித அடிப்படையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் பின்பற்றாமல், தமது பொதுக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை லாரிகளில் ஏற்றி வந்து அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றார்கள்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகின்றன. சீர்திருத்தவாத அரசியலோடு ஆட்சிக்கு வந்த, பிராந்தியவாத கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மற்றும் அகில இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) சீரழிவை வலதுசாரித் தனமாக சுரண்டிக்கொள்ள முற்படும் நாம் தமிழர் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் அதே முதலாளித்துவ சார்பு தொழிலாள வர்க்க விரோத அரசியலையே தொடரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இது உள்ளது.
கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசிய முன்னோக்கை நோக்கி திரும்பாமல், தடம்புரளச் செய்வதை நோக்கமாக கொண்ட ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் அதன் தொழிற் சங்கங்களின் காட்டிக்கொடுப்பினால், நாம் தமிழர் கட்சி போன்ற வகுப்புவாத இயக்கங்கள் இன்று அரசியல் அரங்கத்துக்கு வந்திருக்கின்றன.
ஸ்ராலினிச கட்சிகளான, C.P.I மற்றும் C.P.I.M, பல தசாப்தங்களாக ‘’மத சார்பற்ற கூட்டணி’’ என்ற மோசடிப் பெயரில், அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க தலைமையிலான தேர்தல் கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்து, அவற்றை ஆட்சிக்கு கொண்டு வந்ததுடன், முதலாளித்துவ ஆட்சியின் தூண்களாக செயற்பட்டு வருகின்றன. 1999ல் அடெல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து, மூன்று முக்கிய மந்திரிப் பதவிகள் பெற்று டெல்லியில் ஆட்சி நடத்திய தி.மு.கவின் கூட்டணியில் தற்போது C.P.I மற்றும் C.P.I.M, ஐக்கியமாகியுள்ளன.
பெரு நிறுவனங்களின் கட்சிகளாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க மீது நம்பிக்கையிழந்த தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டுக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அணிதிரட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் அதனது சர்வதேச சமதரப்பினரைப்போலவே உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் கொத்தடிமைச் சுரண்டலை உறுதிப்படுத்தவும் சர்வாதிகார ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகின்றார்.
அவரின் “அன்பான சர்வாதிகாரத்துக்கு” சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவையும், “ஊழலற்ற ஆட்சிக்கு” டென்மார்க்கையும் சீமான் முன் உதாரணமாக கண்டுபிடித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் அணியில் உள்ள நாடுகளாகும்.
சிங்கப்பூரில் லீ குவான் யூ, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மூலதன முதலீடுகளை ஈர்ப்பதற்கு மலிவு கூலி நிலைமைகளை உருவாக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசிய தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலுக்கான வாயிலைத் திறந்ததோடு, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக போராட முயன்ற போதெல்லாம் அரசியல் ஒடுக்குமுறையை நாடினார். அத்தோடு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணையில் இருக்கும் சிங்கப்பூர், சீனாவுக்கு எதிராக அமெரிக்க கடற்படை கப்பல்கள் வந்து செல்வதற்கு ஒரு சிறப்பு துறைமுக நிலையத்தையும் (a special port facility) கட்டியெழுப்பியிருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) இராணுவ அமைப்பில் இருக்கும் டென்மார்க், வாஷிங்டன் நடத்திய அனைத்து ஆக்கிரமிப்புப் போர்களிலும் பங்கெடுத்துள்ளதோடு, உள்நாட்டில் புலம் பெயர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக, "நகைச் சட்டம், கெட்டோ திட்டம், பூஜ்ஜிய புகலிடம் கோருவோர்" (Jewelry law, Ghetto plan, Zero asylum seekers) என்ற சட்டங்களை தயாரித்து ஒடுக்கியும் வருகின்றது. நாட்டின் செல்வத்தை பெரும் பணக்காரர்கள் அதிகம் கட்டுப்படுத்தும் இந்த நாட்டில், வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதுடன், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவற்றையெல்லாம் நன்கு அறிந்து வைத்துள்ள சீமான், இந்த ஒப்பீடுகளின் மூலம், சீனாவுக்கு எதிராக இந்தியாவை முன்னரங்க நாடாக மாற்றியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன வகையான அரசியலை பின்பற்றுவார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் தட்டுகளுக்கு தெளிவுபடுத்துகையில், கடந்த 2020 யூனில் இந்திய சீனா எல்லையில், சீன இராணுவத் தாக்குதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலியான சம்பவம் தொடர்பான அவருடைய கட்டுரையில், “1996 மற்றும் 2005ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படியே, இந்திய இராணுவ வீரர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை என விளக்கமளிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கர ஆயுதங்களோடு சீன இராணுவத்தினர் தாக்க வரும்போது ஆயுதமற்ற நிலையில் இருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் அவர்களை எதிர்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை அறியாதவரா? மரணித்துப் போன 20 குடும்பங்களின் உயிரிழப்புக்கும் ஒப்பந்தத்தையே காரணமாகக் காட்டப் போகிறாரா? இராணுவ வீரனின் உயிரைவிட ஒப்பந்தம் மேலானதா?” என வலதுசாரித் தனமாக மோடி அரசாங்கத்தை தாக்குவதோடு மேலும் பல ஆயிரக்கணக்கானவர்களை காவுகொள்ளக் கூடிய போர்வெறிக் கூச்சலிடுகிறார்.
பைடென் நிர்வாகம் பெய்ஜிங்கை நோக்கிய ஒரு ஆக்கிரோஷமான போர் வெறிக் கொள்கையை முன்னெடுத்து, உயர் தொழில் நுட்ப உற்பத்தி, விநியோக சங்கிலிகளை சீனாவிலிருந்து புதிய இடங்களுக்கு மாற்ற தூண்டுகிறது. இந்த மலிவுகூலி உற்பத்தி, விநியோகச் சங்கிலிகளை உள்வாங்க இந்திய ஆளும்தட்டு கணக்கிடுகிறது.
“அமெரிக்க-சீன பதட்டங்களுக்கு மத்தியில் ஆப்பிள், அமசன் மற்றும் சாம்சுங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றி வருவதால், இந்தியா அடுத்த உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாறக்கூடும்” என்று புளூம்பேர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் நாடுகடந்த தொழிற்துறை உற்பத்தி நிறுவனங்களை அதிகம் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது ஆகும்.
குறிப்பாக நாடுகடந்த கூட்டுநிறுவனங்கள் செறிவாக உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக விஜயம் செய்த சீமான், அந்தப் பகுதியில் கொத்தடிமைமுறை உழைப்பு, எந்த உத்திரவாதமும் அற்ற தற்காலிக வேலை முறை போன்றவற்றிற்கு எதிராக தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை பற்றி எதுவும் பேசவில்லை.
மாறாக, தொழிலாளர்கள் மத்தியில் தேசியவாதத்தை தூண்டி பிளவுபடுத்தும் பிற்போக்குத்தனமான முயற்சியில், தமிழ் நாட்டில் 70 வீதத்துக்கும் அதிகமான பெரும் நிறுவனங்களை வெளி மாநில முதலாளிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றார். தான் ஆட்சிக்கு வந்தால் “தற்சார்பு பொருளாதாரம், மண்ணும், மண்சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலமாக, தொழிற் துறையிலும், கல்வியிலும், மருத்துவத்திலும், பொருளாதாரத்திலும் உலகத்தின் தலை சிறந்த நாடாகவும், தமிழ் நாட்டை மாற்றுவேன்” என சீமான் கூறி வருகின்றார்.
இந்தியா தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டை சர்வதேச, உள்நாட்டு நிதியாளும் தட்டுகளுக்கு தெரிவிக்கையில், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பிரித்தெடுக்கப்பட்ட ‘’இந்திய ஐக்கிய அரசுகள் முறைதான் (United States of India) இந்தியாவுக்கு தேவை” எனக் கூறி, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’’ என்பதற்கு தனது ஆதரவை தெளிவுபடுத்துகிறார். மேலும், தமிழ் முதலாளி வர்க்கம், தமிழ்நாட்டு தொழிலாளர்களை சுரண்டி கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக, “என் இனத்துக்கு அதிகாரம் தேவை” என வலியுறுத்துகிறார்.
அந்தந்த மாநிலத்தில் உள்ள முதலாளி வர்க்கத்தின் இலாபத்துக்காக, மலிவு கூலி சுரண்டலுக்கான நிலைமைகளை உத்திரவாதம் செய்வதன் பேரில், நாடுகடந்த கூட்டு நிறுவனங்களுக்கு எதிரான இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களை இன, மத, மொழி அடிப்படையில் பிளவுபடுத்துவதே சீமானின் குறிக்கோளாகும்.
ஒன்றரைக் கோடி வெளி மாநிலத் தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழ் நாட்டுக்கு ஆபத்து என்று கூச்சலிடும் சீமான், தமிழ் நாட்டிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற் துறைகளை தொழிலாளர்களிடமிருந்து பாதுகாக்க, “பொலிஸ் துறையை மேலும் நவீன வசதிகளுடன் மேம்படுத்த” அழைப்பு விடுக்கிறார்.
தமிழ் நாட்டு பொலிஸ் படை ஏற்கெனவே ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதில் இழிபெயரெடுத்த வரலாற்றை கொண்டது. மேலும் அதை நவீனமயப்படுத்துவதற்கான சீமானின் அழைப்பு பொலிஸ் அரசு சர்வாதிகாரத்திற்கு வழியமைப்பதாகும். “படுக்கை அறை தவிர அனைத்து இடங்களிலும் கண்கானிப்புக் கமராவைப் பூட்டி” தமிழ் நாட்டை “ஒழுக்கமான நாடாக” ஆக்க சீமான் சபதமெடுத்துள்ளதன் உண்மையான அர்த்தம் இதுவே ஆகும்.
சீமானும், நாம் தமிழர் கட்சியினரும், இந்த பிற்போக்கு முயற்சிக்கு ஆதரவு பெறுவதற்காக, இலங்கையில் 2009 மே மாதம், இராஜபக்ஷவின் ஆட்சியாளர்களால் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக தமிழ் நாட்டில் இருந்துவரும் அனுதாபத்தை சுரண்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
தமிழ் நாட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் பேரில், இந்திய ஆளும் வர்க்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்து, புலி சந்தேகநபர்கள் எனப்படுவோரை கைது செய்வது மற்றும் தமிழ் நாட்டில் உள்ள இழிநிலையிலான முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளை கண்காணிப்பதையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
எனினும், புலி சின்னத்தை தனது கட்சிக் கொடியில் பதித்து, அதன் தலைவர் வே. பிரபாகரனின் ‘’வீரப் போராட்டத்தின்’’ தொடர்ச்சியாக தன்னை முன்னிறுத்துவதன் மூலம், புலி போராளிகள் மற்றும் பிரபாகரனதும் “வீரம்” மற்றும் “அர்ப்பணிப்பு” சம்பந்தமாக தமிழர்கள் மத்தியில் நிலவும் மாயையை சுரண்டிக்கொண்டு அரசியல் செய்வதற்கு சீமான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பாரிய உயிரிழப்புக்களோடும் இரத்தக்களரியோடும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தவேளையில், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அந்த கொடூரமான நிகழ்வைப் பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகையில், “ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இலங்கையில் வடக்கு கிழக்கில் ஒரு குட்டி அரசை அமைக்க முயன்ற விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது, அதன் தேசிய, பிரிவினைவாத முன்னோக்கின் தோல்வியாகும்” என தெளிவுபடுத்தி இருந்தது.
தீவிலும் இந்திய உபகண்டத்திலும் சோசலிச குடியரசு ஒன்றியத்தை கட்டியெழுப்பும் முன்னோக்கை அடித்தளமாக கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு கட்சியை கட்டியெழுப்புவதே இன்று தெற்காசிய தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள கடமை என அது மேலும் விளக்கியது.
அத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது உலக ட்ரொட்ஸ்கிசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் மட்டுமே ஆகும்.
https://www.wsws.org/ta/articles/2021/04/06/tami-a06.html
இந்தியாவில் மோசமடைந்து வரும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதே நாளன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவிலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் (புதுச்சேரி) தேர்தல் நடைபெறுகின்றது. அதேவேளை கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மார்ச் 27 முதல் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 2 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக இந்தியாவின் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் சீனாவுடன் வளர்ந்து வரும் போர் பதட்டங்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுகின்றன. பெரும் வேலை இழப்புக்கள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை உயர்த்தியிருப்பதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங்கின் முதலீட்டாளர் சார்பு வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக 2014 இல் இந்திய முதலாளித்துவம் நரேந்திர மோடி தலைமையிலான இந்து-மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது. ஸ்ராலினிச ஆட்சி 1991 இல் சோவியத் ஒன்றியத்தை கலைத்த சமயத்தில், 1990 களில் கட்டுப்பாடற்ற மற்றும் தடையற்ற சந்தைக் கொள்கைகளின் கட்டமைப்பாளர்களில் ஒருவராக மன்மோகன் சிங் இருந்தார். பாஜக, காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் ஸ்ராலினிச மற்றும் பிராந்தியவாத கட்சிகள் அனைத்தும் தொற்றுநோய்களின் போது, இன்று இறப்பு எண்ணிக்கை 158,642 ஆக உயர்ந்துள்ள போதிலும் கூட. பொருளாதாரத்தை மீண்டும் திறக்க முன்வந்துள்ளன.
இந்தியா உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருப்பதற்கு கடந்த தசாப்தங்களாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகளின் விளைவுகளாக இருக்கின்றன. இந்திய சமுதாயத்தில் முதல் ஒரு சதவிகிதத்திலுள்ளவர்கள், கீழுள்ள 70 சதவிகிதத்தை விட நான்கு மடங்குக்கதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். மில்லியன் கணக்கான மக்கள் வறுமை, கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் வாழ்கின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வாஷிங்டனின் சீனாவிற்கு எதிரான மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைக்க பாஜகவும் காங்கிரசும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த குறிக்கோளின் முடிவில் பாஜக தனது போர் விமான மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு திறந்துவிட்டுள்ளது. கூடுதலாக, இது வாஷிங்டனின் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் இராணுவ-பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இது அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான போரின் விளிம்பிற்கு ஆசியாவைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பிராந்தியவாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அஇதிமுக) அரசாங்கம் இந்த பிராந்தியத்தில் பாஜகவின் கூட்டாளியாக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள இந்திய பெருவணிக மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நலன்களுக்காக சேவையாற்றுகிறது. தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை மிருகத்தனமாக சுரண்டுவதற்கு உதவுகின்றது. இது பாஜக மற்றும் சாதிவாத பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பா.ம.க) ஒரு தளர்வான தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
பிராந்தியவாத, தமிழ்-தேசியவாத, திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) பரவலாகக் கிடக்கும் உத்தியோகபூர்வ ஊழலுக்கு எதிராக இயங்குவதாகக் கூறிக்கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக தேர்தலில் போட்டியிடுகிறது, அது. திமுக வுக்குள் ஏற்பட்ட பிளவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் திரைப்பட நட்சத்திரம் எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையில் அஇஅதிமுக வெளியே வந்தது என்பதைக்கொண்டு பார்க்கையில் அஇஅதிமுக ஊழலை அடிப்படையாக எதிர்க்கிறது என்ற திமுகவின் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை.
மதிப்பிழந்த திமுக மற்றும் அஇஅதிமுக, அல்லது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு ஒரு தெளிவான முற்போக்கான மாற்று இல்லாததை சுரண்டுவதற்காக நாம் தமிழர் கட்சி மற்றும் பிற தமிழ் தேசியவாதிகளும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டை இன ரீதியாக தமிழர்கள் ஆள வேண்டும் என்று கூறி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த நாம் தமிழர் கட்சி முயற்சி செய்கிறது, மேலும் அரசுத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதுடன், பொதுவாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் இனரீதியாக தமிழர் அல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் -இந்திய-கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் சாதிவாத விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) அனைத்தும் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன.
தொழிலாளர்களை அரசியல் ரீதியாக சோர்வுறச் செய்யும் முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணியை நாட வேண்டும் என்று இந்திய ஸ்ராலினிச கட்சிகள் வரலாற்று ரீதியாக கோரி வந்துள்ளன. “மதச்சார்பின்மை” க்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு அவர்கள் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்கின்றனர். காங்கிரஸை அதன் இடதுபுறத்திலிருந்து எதிர்க்கும் ஒரு இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்திற்குள், காங்கிரஸ் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் மீதான விரக்தியைப் சுரண்டிக்கொள்ள தமிழ்நாட்டில் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளை அவைகள் அனுமதித்துள்ளன.
தொழிலாளர்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை 1967 ல் காங்கிரஸ் கட்சி இழந்ததிலிருந்து அதிகாரத்தில் மாறி மாறி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகியவைகளை கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாதவைகளாக கொண்டிருக்கின்றனர். உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதன் மூலம் வாக்குகளை வெல்ல முடியாமல், தங்களை வாக்காளர்களுக்கு சந்தைப்படுத்துவதற்காக ஐபேக் (I-PAC - Indian Political Action Committee ) அல்லது ஓஎம்ஜி (OMG - One Mind Generation) போன்ற தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வழங்குபவர்களை நியமித்திருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் நேரடியாக பிணைந்திருக்கின்ற பெரும் ஊடக வணிக நிறுவனங்களை இயக்கும் கோடீஸ்வரர்களுக்காக இரு கட்சிகளும் பேசுகின்றன, மேலும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மிருகத்தனமாக நசுக்க உதவியுள்ளனர். 1999 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது, திமுக அரசாங்கம் 652 தொழிலாளர்களைக் கைது செய்து திருச்சியில் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். திமுக அரசாங்கத்தின் போலீசார் அவர்களைத் தாக்கி 17 பேரை ஆற்று நீரில் மூழ்கடித்துள்ளனர். அது தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலையாக வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு-உருக்கும் ஆலையில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் அஇஅதிமுக அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இந்தத் தூத்துக்குடி படுகொலையில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவத்தால் பின்பற்றப்படும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) கொள்கைகள் சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் வர்க்கப் பதட்டங்களை பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளன. தொற்றுநோய்களின் போது அகில இந்திய அளவில் இரண்டாவது மோசமான பொருளாதார வீழ்ச்சியை தமிழ்நாட்டில் பார்க்க முடிந்தது.
கடந்த மாதம், அஇஅதிமுக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22 நிதியாண்டிற்கான குறுகியகால வரவு செலவு திட்ட அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாடு தற்போது ரூ.4.85 லட்சம் கோடி (74.1 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனைக் கொண்டுள்ளது, இது அடுத்த ஆண்டு ரூ.5.70 லட்சம் கோடியாக (87.6 பில்லியன் அமெரிக்க டாலர்) உயரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன்களுக்கான வட்டியாக நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நிதி நெருக்கடியின் ஆழத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அரசாங்கம் அதன் வட்டியை செலுத்துவதற்காக புதிய கடன்களை வாங்கி வருகிறது.
பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்து பின்னர் 2019 ல் மறுதேர்தலிலும் வெற்றி பெற்றதிலிருந்து, அது இடைவிடாமல் தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவதுடன், ஒரு பிற்போக்குத்தனமான தேசிய வரி முறையை கொண்டுவந்தது, முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) திணித்தது, மேலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. தொழிலாளர் சட்டம் மற்றும் விவசாய சட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில் முதலாளித்துவ வர்க்கம் பின்பற்றும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் தொழிலாளர் எதிர்ப்பு செயல் திட்டங்களுக்கு மாற்றாக இந்திய மற்றும் உலக தொழிலாள வர்க்கத்திற்குள் இயக்கம் வளர்ந்து வருகிறது. 2020 வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வேலைநிறுத்தப் போராட்ட அலைகள் வந்துள்ளன. இந்தியாவில், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள், முஸ்லீம்-விரோத CAA க்கு எதிரான பெருந்திரளான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவை தொற்றுநோய்க்கு முன்னரான காலத்திலும் நடைபெற்றுள்ளன.
மூன்று ஆண்டுகளாக தாமதமாகிவிட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. வரவிருக்கும் மாநிலத் தேர்தல் விளம்பரங்களுக்கு மில்லியன் கணக்கான பொது நிதியை பயன்படுத்தி தங்கள் ஆட்சியை மீட்டெடுப்பதற்கான அஇஅதிமுக அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக பரவலாக சீற்றம் எழுந்துள்ளது, அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்க மறுத்து அவர்களை வறுமைக்குள் தள்ளுகின்றது.
COVID-19 தொற்றுநோய் காட்டுவது என்னவென்றால் முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக விரோத கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், வைரஸுக்கு எதிராக விஞ்ஞான ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கும் உலகெங்கிலும் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தொழிலாள வர்க்கத்துக்குள் வளர்ந்து வரும் சர்வதேச இயக்கம் எதிர்கொள்ளும் பணியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் ஊக்குவிக்கப்படும் தேசியவாத கருத்துக்களுடன் முறித்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு ட்ரொட்ஸ்கிச தலைமையை உருவாக்குவதே அதற்கு தேவையான போராட்டமாக இருக்கிறது. அது இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியால் இந்திய துணைக் கண்டம் முழுவதும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
17 March 2021
https://www.wsws.org/ta/articles/2021/03/17/tami-m16.html
தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது
தமிழ்நாட்டின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.இ.அ.தி.மு.க.) அரசாங்கம், பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து, மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த பொது அடைப்பை நீக்கி, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்துள்ளது.
இந்த பொதுமுடக்க நீக்கம், வெகுஜனங்களின் உயிர்வாழ்வை அலட்சியம் செய்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் உழைப்பை, பெரும் வர்த்தகர்களின் இலபத்திற்காக கடுமையாக சுரண்டுவதற்கு அனுமதிப்பதை இலக்காகக் கொண்டு, உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் முன்னெடுக்கும் “வேலைக்குத் திரும்புதல்” என்ற குற்றவியல் கொள்கையின் பாகமாகும்.
உலகின் ஏனைய அரசாங்கங்களைப் போலவே இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் தொற்றுநோயை உடலில் தாங்கிக்கொண்டு உழைக்க நிர்ப்பந்திக்கும், விஞ்ஞானபூர்வமாக ஒப்புக்கொள்ளப்படாத “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” (Herd immunity) கொள்கையை சூட்சுமமாக அமுல்படுத்துகின்றன. அரசாங்கம் வேலைத்தளங்கள் மட்டுமன்றி கோயில்கள், பெரும் வணிக வளாகங்கள், பூங்காக்கள் என அனைத்தையும் திறந்துவிட்டுள்ளது.
25 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தபோதே வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது 100 வீதம் தொழிலாளர்களை பயன்படுத்தப்படும்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொற்றுக்கு உள்ளாகும் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர். போதாக்குறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையில், தொழிலாளர்கள் சமூக இடைவெளி இன்றி நெரிசலாக பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர்.
ஏனைய மாநிலங்களில் போல் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் அ.இ.அ.தி.மு.க. அரசாங்கமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகின்றது. செப்டம்பர் 9, விழுப்புரத்தில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது என்று புழுகியுள்ளார்.
உண்மை என்னவெனில், தமிழ் நாட்டில் நாளொன்றுக்கு கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. இந்தியாவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ரா மற்றும் ஆந்திர பிரதேசத்தை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை செய்திகளின்படி 5,488 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 67 பேர் மரணித்துள்ளனர். அவர்களில் தலைநகர் சென்னையில் மட்டும் 989 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கோவிட் 19 வரைஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 530,908 பேர் ஆகும். தமிழகத்தில் இதுவரை 8685 பேர் தொற்று நோயால் மரணித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரம் குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் பள்ளிகள் திறக்கபடமாட்டாது என்று பழனிசாமி கூறியுள்ள போதிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் அங்கு இருக்கும் தனிமைப்படுத்தப்படும் முகாம்களை அப்புறப்படுத்துமாறு அரசாங்கத்தின் தலைமை செயலர் உத்தரவிட்டிருக்கிறார். பழனிசாமியின் கருத்து, மாணவர்களுக்கு கொரோனா தொற்றினால், அதற்கு பெற்றோரைப் பொறுப்பாக்குவதை இலக்காகக் கொண்டதாகும்.உலகம் பூராவும் அரசாங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதற்காக, அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நிர்ப்பந்தித்து வருகின்றன.
அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் புதிய சுற்று சுரண்டலுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கு அடக்குமுறைகளையும் தயார் செய்துள்ளது. செப்டம்பர் முதல்வாரத்தில் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவை ஊதியத்தையும் மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கிய, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறையினர் கைதுசெய்து ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தனர். அங்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். செங்கொடி தொழிற்சங்கம் வழமைபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பை கரைத்து விடுவதற்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு, எந்த பயனும் இன்றி காட்டிக்கொடுத்துவிட்டது.
மே மாதம் தமிழ்நாடு அரசாங்கம் தனது வருமானத்தை பெருக்குவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தவிட்டு, அவற்றில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை கட்டாய வேலையில் அமர்த்தியது. ஆகஸ்ட் 25 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் செய்தனர். கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை, தொழில் நிரந்தரம் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை டாஸ்மார்க் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் 25 பேர் உட்பட தமிழகம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை இடமாற்றம் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மூன்றாவது கட்ட முடக்கத் தளர்வின்போது, உணவு விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விக்கி நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் கொடுத்த அத்தனை வருவாய்களையும் பாதியாக வெட்டித் தள்ளியதற்கு எதிராக, கடந்த மாதம் உணவு விநியோக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னையில் சுமார் 7,000க்கும் அதிகமான ஸ்விக்கி தொழிலாளர்களில் பலர் பட்டதாரிகளாவர். கொடுக்கப்படும் இலக்குகளை அடைந்து பணம் சம்பாதிக்க இரவு பகலாக வண்டியை ஓட்டி உடல் வலியையும் நோய்களையும் மட்டுமே அந்த இளைஞர்கள் சம்பாதிக்கின்றனர். “முன்னர் நாளொன்றுக்கு 700 ரூபாய்க்கு டெலிவரி பார்த்தால், 200 ரூபாய்க்கு மேல் ஊக்கத்தொகை கிடைக்கும். அதோடு வாரா வாரம் இலக்கு மற்றும் வாடிக்கையாளரின் மதிப்பீட்டுக்கு (Target and Customer Rating) 1,000-2,300 ரூபாய்க்கு மேல் வரும். நாளொன்றுக்கு குறைந்தது 25 டெலிவரியாவது பார்ப்போம். இந்த கொரோனா காலகட்டத்தில் அவ்வளவாக ஆர்டர் வர்றதில்லை. முன்னர் நாளொன்றுக்கு எல்லாச் செலவும் போக 700-800 ரூபாய் மிஞ்சும். இப்போ பெட்ரோல் செலவெல்லாம் போக கையில எதுவும் இல்லை. இதில குடும்பத்தை நடத்தமுடியாமல் இருக்கிறோம்” என்று ஸ்விக்கி ஊழியர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.
மார்ச் மாதத்திலிருந்து ஓயாது பணிபுரியும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் என பல ஆயிரம் 108 இலக்க ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள் முறையாக கொடுக்கப்படாததால் தேநீர் மற்றும் பிஸ்கட்டை உண்டு சேவையாற்றுகின்றனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் அரசு அறவித்த ஒரு மாத சிறப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு பணியில் உள்ள 108 இலக்க ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த ஆகஸ்ட்டில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகை 5,000 ரூபாயும் வழங்கப்படவில்லை. நிர்வாகத்திடம் கேட்டால் இன்னும் அரசாணை போடவில்லை என்று கூறுகின்றனர். பணியின்போது கொரோனா பாதித்து இறந்த ஆம்புலனஸ் மருத்துவ உதவியாளருக்கு அரசு அறிவித்த ரூபா 50 லட்சமும் கிடைக்கவில்லை.
தொழிற்படையை குறைப்பதற்கும் சுரண்டலை அதிகரிக்கவும் தற்போது தானியங்கி உற்பத்தி முறையை ஊக்குவிக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி எடுத்துவருகின்றன. வீடுகளுக்கே பொருள் விநியோகம் செய்வது, உற்பத்தியை தானியங்கி (automation) முறையில் விரிவுபடுத்துவது, திறமான செயல்பாட்டை உறுதிப்படுத்த டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவது போன்றவற்றுக்காக 150 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக ஆம்வே (Amway) இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷு புத்ராஜா கூறியிருக்கிறார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம், அதன் உற்பத்தியில் கோவிட்டுக்கு முந்தைய நிலைகளில் 80 சதவீதத்தை எட்டியிருப்பதாகவும் ஜூன் மாதம் 50 சதவீதமாக குறைந்திருந்த மின்னணு பொருள் உற்பத்தியை 80 வீதமாக அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கிறது. வேலை சுமையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய இலக்கை எட்டுவது சாத்தியமாகும்.
பொதுமுடக்கத்தின் போது அரசாங்கத்தால் அலட்சியம் செய்யப்பட்ட புலம்பெயர் மலிவு கூலி தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்காத நிறுவன உரிமையாளர்கள், இப்போது அவர்களை வைத்து குறைந்த கூலிக்கு வேலை வாங்குவதற்காக அழைத்துவர செலவிடுகின்றன. "நாங்கள் வலுவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பீகார் மற்றும் பிற இடங்களிலிருந்து 35 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஒரு நபருக்கு 8,000 ரூபாய் செலவழித்து அழைத்து வருகிறோம்" என்று எஸ்பி அப்பரல்ஸ் நிர்வாக இயக்குநர் பி. சுந்தர்ராஜன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
பொது முடக்கத்தினால் சென்னையில் மட்டும் வீடூகளில் பணிபுரியும் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். இந்த வறிய தொழிலாளர்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமற்ற சேரிகளிலிருந்து பணிக்கு வருகிறார்கள். இப்போது ஒரு சில வீடுகளில் பணிபுரிய அழைக்கப்பட்டாலும் முகக்கவசமோ அல்லது சானிடைசரோ கொடுக்கப்படுவதில்லை. அரசாங்கம் தங்களை கணக்கெடுப்பதில்லை என்று பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ரேசன் அரிசியும், தன்னார்வலர்கள் அவ்வப்போது கொடுக்கும் உதவிகள் மட்டுமே கிடைக்கின்றன. ரேசனில் கொடுக்கும் அரசி மிக மோசமானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய பழமையான சுற்றுலாத்தளமான மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கும் பயணிகள் வராத காரணத்தால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டல் அமைப்புகள் அலுவலகங்களை மூடிவிட்டன. இதனால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைப்புகள் தெரிவிக்கின்றன. 2014 இலிருந்து 2018 வரையான காலத்தில் 39 கோடி உள்ளூர் சுற்றுலா பயணிகளும், 61 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வளவு பிமாண்டமான வருமானத்தை தமிழ்நாடு இழந்திருக்கின்றது.
சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் வாகன காப்பீடு கட்டமுடியாத நிலையிருப்பதால் அதற்கு விலக்கு அளிக்குமாறும், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தாங்கள் செலுத்திய ஒரு வருட ஜிஎஸ்டி வரி பணத்தை திருப்பி கொடுக்குமாறும், மேலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரும்வரை தங்களுக்கு மானியங்கள் வழங்கவேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் அல்லது நிவாரணம் கொடுப்பதற்கு பதிலாக, சம்பளம் கொடுக்கவும் அவர்களை மீண்டும் வேலையில் தக்கவைத்துக்கொள்வதற்கும் எங்களுக்கு பாதி அல்லது மாத சம்பளத்தில் 50 அல்லது 100 சதவிகித மானியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அரசாங்கம் சுற்றுலா தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எந்த மானியமும் வழங்காத அதேவேளை, மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த நட்ட ஈடும் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
தொழிலாளர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு எந்த அரசாங்கமும் முதலாளித்துவக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பேணுவதன் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம், கொரோனா பாதிப்பினால் எழுச்சியடையும் வெகுஜனப் பகைமையை திசைதிருப்பிவிடுவதற்காக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தை ஸ்ராலினிச சிபிஐ, சிபிஏம் உட்பட எதிர்கட்சிகளும் மௌனமாக ஆதரிக்கின்றன.
தமிழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் துன்பங்களை தேர்தல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருப்பதோடு, அந்த எதிர்ப்புகளை தேசியவாத பாதையில் திசை திருப்பிவிடுவதற்காக ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகத்தை தூக்கிப் பிடிக்கின்றது.
தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் மற்ற மாநில மற்றும் சர்வதேச தொழிலாளர்களும் ஐக்கிய்படுவதை தடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி, தமிழ் பேரியக்கம் போன்ற பல்வேறு மொழிவாத, இனவாத, சாதிய மற்றும் பிராந்திய கட்சிகளும் முழுமூச்சாக செயல்பட்டுவருவதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசிய பிராந்திய மூலோபாய நலன்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவருகின்றன.
கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு முதலாளித்துவ அமைப்பும் இலாயக்கற்றுள்ள நிலையில், கொரோனாவை தடுக்க சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியமாகும். அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் தரமான சம்பளம், சிறந்த வேலை நிலைமை மற்றும் பணி நிரந்தரம் கோரியும், அதிக நேர வேலை மற்றும் வேலை அழிப்புக்கும் எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சர்வதேச தொழிலாளர்களுடன் இந்திய தொழிலாளர்களும் ஐக்கியப்பட்டு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, ஆட்சி அதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே தொற்று நோய், உலக யுத்தம் உட்பட பேரழிவுகளை தடுக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையிலான சோசலிச சமத்துவக் கட்சிகள் (சோ.ச.க.) மட்டுமே இந்த முன்நோக்குக்காகப் போராடி வருகின்றன. இந்தியாவில் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதற்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கு இன்றியமையாததாகும்.
https://www.wsws.org/ta/articles/2020/09/21/tami-s21.html





